பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5. திருப்புத்தூர் திருத்தளிநாதர்

றைவனின் தாண்டவத் திருவுருங்கள் ஏழு என்பர். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து செயல்களை இறைவன் செய்கிறான், ஒவ்வொரு செயலைச் செய்யும் போது ஒவ்வொரு தாண்டவம் புரிகிறான் என்றும் அறிவோம். 'ஐந்து கிருத்யங்களுக்கும் ஐந்து தாண்டவக் கோலம்தானே இருத்தல் வேண்டும். ஏழு என்ன கணக்கு?' என்று நீங்கள் கேட்பீர்கள். ஐந்து செயல்களுக்கும், ஐந்து தாண்டவம், அதில் காத்தலை இரண்டு கூறாய்ப் பிரித்த இன்பக் காத்தல், துன்பக் காத்தல் என்று பாகுபாடு பண்ணி, ஐந்தை ஆறாக்கியிருக்கிறார்கள். பின்னர் எல்லாச் செயல்களையும் ஒருமிக்கச் செய்யும் ஆனந்தத் தாண்டவமே, இத்தாண்டவ வடிவங்களுக்கெல்லாம் சிகரமாகிறது. இந்தாண்டவ வடிவங்களை இறைவன் தன் துணைவியாம் பார்வதிக்குக் கூறியதாக வரலாறு.

மாதவர் பரவும் ஆனந்த நடனம்
வயங்குறு சந்தியா நடனம்
காதலி! நின்பேர்க் கௌரி தாண்டவமே
கவின்பெறு திரிபுர நடனம்
ஓதுமாகானி தாண்டவம், முனிதாண்டவம்
ஓடும் உலக சங்கார
மேதகு நடனம் இவை இவைநாம்
விதந்த தன்னுமம் என்று உணர்த்தி

என்பது பாட்டு, இவற்றில் கௌரி தாண்டவத்தை அன்னை பார்வதியின் வேண்டுகோளுக்காகவே ஆடிக்காட்டியதாக ஐதீகம். அது காத்தல் இல்லாதிருக்குமா? தில்லைப் பொன்னம்பலத்திலே ஆனந்தத் தாண்டவத்தையும் மதுரை வெள்ளியம்பதியிலே சந்தியா