பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை

"வேங்கடம் முதல் குமரி வரை' என்ற தொடரில் நான்காவது புத்தகம் இது. இதற்குமுன் வெளிவந்த பாலாற்றின் மருங்கிலே, பொன்னியின் மடியிலே, காவிரிக் கரையிலே என்ற மூன்று பத்தகங்களையும் தமிழ் அன்பர்கள் ஆவலோடு வரவேற்று ஆதரித்திருக்கின்றனர். அதனாலேயே இந்த நான்காவது புத்தகத்தைப் பொருநைத் துறையிலே என்ற தலைப்போடு வெளியிட முனைகிறேன்.

இந்த நான்காவது புத்தகம் பழனி ஆண்டவன் திருச்சந்நிதியில் இருந்து துவங்கி வைகைக் கரையில் நடந்து பொருநைத் துறையிலே படிந்து கன்னிக்குமரி சந்நிதிவரை செல்கிறது. இத்துடன் தமிழ் நாட்டுத் தலயாத்திரையும் ஒருவாறாக முடிவுறுகிறது. இனி வடநாட்டுத் தலயாத்திரையைத் துவங்கவேண்டியதுதான். அந்தத் தல வரலாற்றுக் கட்டுரைகளும் வேங்கடத்ததுக்கு அப்பால் என்ற தலைப்பில் இரண்டு புத்தகங்களாக வெளியிட எண்ணம். இறை அருள் கூட்ட வேணும்.

கட்டுரைகள் தொடர்ந்து கல்கியில் வெளிவந்தன. அப்போது அவைகளைப் பாராட்டி எழுதிய அன்பர் பலர். அவர்கள் தந்த ஊக்கமே இக்கட்டுரைகள் நூல் வடிவில் வருவதற்கு காரணமாயிருந்தது. அந்த அன்பர்களுக்கு எல்லாம் என் நன்றி.

இந்த நான்காம் தொகுதியில் ஒரு நல்ல முகவுரையைச் சகோதரர் திரு. சா. கணேசன் அவர்கள் வழங்கியிருக்கிறார்கள். அது ஓர் அரிய ஆராய்ச்சியாகவே அமைந்திருக்கிறது. அவர்களோடு நான் இருபது வருஷங்களுக்கு மேலாகத் தொடர்பு கொண்டவன். அவர்கள் நடத்தும் கம்பன் பணியில் எல்லாம் பங்கு கொண்டவன். அவர்கள் ஆசியுடன் இப்புத்தகம் வெளிவருவது ஒரு பாக்கியம் என்றே கருதுகின்றேன். அவர்கள் அன்பிற்கு என் உளம் கனிந்த நன்றி.

என் இலக்கிய வாழ்வை செப்பம் செய்தவர்கள் ரஸிகமணி டி.கே.சி. அவர்கள், அவர்களுக்கும் முன்னால் என்னிடம் அன்பு கொண்டிருந்தவர்கள் வெள்ளகால் சுப்பிரமணிய முதலியார் அவர்கள்.