பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

வேங்கடம் முதல் குமரி வரை

உள்ளத்தில்; 'எல்லாமே வல்லவராகிய உமக்குச் சகள ரூபம் எதற்கு?' என்று கேட்டு வைக்கிறாள் அன்னை பார்வதி. அத்தனும் சிருஷ்டி திதி, சங்காரம். திரோபவம், அனுக்கிரகம் என்னும் ஐந்தொழிற்காகவே இவ்வுருக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லிவிட்டு அத்துடன் நிறுத்தாது. எனது கண் திறக்கும்போது உலகம் தோன்றும். விழித்திருக்கும் போது வாழும், மூடுங்காலத்து அழியும் என்று அருள் திறத்தை மேலும் விளக்குகிறார். இதைக் கேட்ட அம்மை-பெண்மைக்கே உரிய சந்தேகத்தோடு, இதைப் பரீட்சித்துப் பார்த்துவிடத் துணிகிறாள்.

இறைவன் பின்புறமாக வந்து அவரது கண்கள் இரண்டையும் ஏதோ விளையாட்டாகத் தன் கைகளால் பொத்துகிறாள். அவ்வளவுதான்; மூவுலகமுமே இருளில் புதைந்து விடுகின்றது. உயிர்கள் எல்லாம் வாடி வதங்கி விடுகின்றன. அண்ணலும் அம்மையைக் கடிந்து, அவள் தன் கைகளை விவக்குகிறார். இப்படி ஒரு உத்பாதத்தை ஏற்படுத்தியதற்காகப் பார்வதியைக் கரிய உருவமுடைய காளியாகக் கடவாய் என்று சபித்து விடுகிறார். அம்மை, அறியாது செய்த பிழையை மன்னிக்க வேண்டும் என இறைவன் காலடியில் விழுந்து கதற, 'சரி சண்டாகரனை வென்ற பின், காளியுருவம் நீங்கித் திரும்பவும் என்னை வந்து சேர்வாய்' என அனுக்கிரகிக்கிறார்.

அம்மையும் அரனது ஆணைப்படியே காளியாகிறாள், கானப்பேரூரை அடுத்த மருதவனத்தில் துர்க்கை வடிவிலே கோயில் கொள்கிறாள். இந்தச் சமயத்தில் பெரு வரங்கள் பல பெற்ற சண்டாசுரன் தேவர்களை வருத்த, தேவர்கள் அம்மையிடம் முறையிட, அம்மையும் சண்டாசுரனோடு போர் புரிந்து அவனை முடிக்கிறாள். தேவர்களும் பூமழை பொழிந்து தேவியை வாழ்த்துகிறார்கள். தேவியின் சாபமும் நீங்குகிறது. சாபவிமோசனம் பெற்ற இந்தக் காளியம்மையே அழகெலாம் திரண்ட சுவர்ணவல்லியாகி, கானப் பேரூரில் கோயில் கொண்டிருந்த காளீசரை மணந்து அவரது இடப்பாகத்தில் வீற்றிருக்கிறாள்.