பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

வேங்கடம் முதல் குமரி வரை

மூலமும் நடுவும் ஈறும்
இல்லதோர் மும்மைத்தாய
காலமும் கணக்கும் நீத்த
காரணன் கைவில்லேந்தி
சூலமும் திகிரி சங்கும்
கரகமும் துறந்து தொல்லை
ஆலமும் மலரும் வெள்ளிப்
பொருப்பும் விட்டு அயோத்தி வந்தான்

ராமன் என்பான் கம்பன். அந்த ராமனே பிரதிஷ்டை பண்ணிய லிங்கம்தான் ராமலிங்கம். அந்த ராமலிங்கம் இருப்பது ராமேச்சுரம். அந்த ராமலிங்கத்தைத் தரிசிக்கவே செல்கிறோம் நாம் இன்று.

ராமேச்சுரம் என்னும் ராமேசுவரம், வங்காளக் குடாக் கடலில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறிய தீவு, சென்னை-ராமேசுவரம் ரயில்பாதையில் மண்டபம் கடந்து பாம்பன் வழியாக ராமேசுவரம் செல்லவேனும். இந்தத் தீவு மாகாவிஷ்ணு தாங்கியிருக்கும் வலம்புரிச் சங்கின் வடிவில் இருக்கிறதென்பர். ரயில்வே ஸ்டேஷனிலிருந்து அரை மைல் தூரத்தில் கோயில் இருக்கிறது. கோயில் பிரும்மாண்டமான பிராகாரங்களுடன் கூடியது. கோயில் கிழமேல் 865 அடி நீளமும், தென் வடல் 675 அடி அகலமும் உள்ளது. கிழக்கு வாயிலை 126 அடி உயரமுள்ள கோபுரம் அழகு செய்கிறது. மேல் வாயிலில் 78 அடி உயரமுள்ள கோபுரம் இருக்கிறது. இதுவே பழைய கோபுரம். தெற்கேயும் வடக்கேயும் கோபுரங்கள் கட்டப்படவில்லை. கிழக்கு வாயில்வர வேண்டுமானால் கொஞ்சம் சுற்றிக் கொண்டு வரவேணும். ஆதலால் எல்லாரும் மேலக்கோபுர வாயில் வழியாகவே கோயிலுள் நுழைவர். நாமும் அப்படியே செல்லலாம்.

மேல் பிராகாரத்தில் வட மேற்கு மூலையில் ஓர் இடம் திரைச்சீலைகளால் மறைக்கப் பட்டிருக்கும். அங்குள்ள காவலனிடம் பத்து காசு நீட்டினால் திறந்து காட்டுவான். அங்கிருக்கும் காட்சிதான்