பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/93

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

வேங்கடம் முதல் குமரி வரை

விடுகிறார். சாபம் இதுதான்; அன்னை பார்வதி பூலோகத்தில் ஒரு வேதியர் மகளாய்ப் பிறக்க வேண்டியது. தந்தையிடம் வேத வேதாகமங்களை 'இம்போஸிஷன்' எழுதுவதுபோல, ஆயிரம் தடவை கேட்டுக் கேட்டு மனனம் பண்ண வேண்டியது. அதன் பின் இறைவன் வந்து வேதப்பொருள் உரைத்துத் திருதணம் செய்துகொண்டு கைலைக்கு அழைத்துச் செல்லவேண்டியது. இந்தச் சாபம், இல்லை, இந்த நல்ல 'எக்ரிமெண்ட்' நிறைவேறுகிறது. நாளாவட்டத்தில்,

ராஜமாணிக்க சதுர்வேதபுரம் என்று ஓர் ஊர் தமிழ் நாட்டில், அங்கு ஒரு வேதியர், வேதங்களை ஓதி உணர்ந்தவர். ஒழுக்கத்தால் உயர்ந்தவர்; அவருக்கு ஒரு குறை. பிள்ளைப்பேறு இல்லையே என்று. அதற்காகத் தம் ஊரின் பக்கத்திலுள்ள இலந்தை வனம் கிராமத்திலே கோயில் கொண்டிருக்கும் இறைவனைப் பிராத்திக்கிறார். அங்குள்ள கௌதம தீர்த்ததில் மூழ்கி, விரதம் இருக்கிறார். ஏன், தவமே புரிகிறார். இவருடைய தவத்துக்கு இரங்கி இறைவனும் பிரத்யக்ஷமாகி வரம் அளிக்கிறார். இப்படிப்பட்ட வர பலத்தால் அவருக்கு மூன்று புதல்வர்களும் ஒரு பெண்ணும் பிறக்கிறார்கள். பெண்ணுக்கு ‘பூண்முலையாள்' என்று பெயரிடுகிறார். மக்கள் நால்வரும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்கிறார்கள். பெண்ணும் வளர்ந்து மணப்பருவம் அடைகிறாள்.

இந்த நிலையில் ஒரு கிழ வேதியர் உருவில் இறைவனே வருகிறான். யாருக்கு அவன் வரம் கொடுத்துப் புத்திர சந்தானத்தை அருளினானோ அந்த வேதியரிடமே தானும் ஒரு வரம் கேட்கிறான்; இரப்போர்க்கு இல்லை என்னாத பெருமையுடைய வேதியரும் கேட்ட வரம் தருவதாக வாக்களிக்கிறார். வந்த கிழவேதியர் கேட்ட வரம். பூண்முலையாளைத் தமக்கு மணம் செய்து தரவேண்டும் என்பதுதான். வரம் கொடுத்த வேதியரும், கிழ வேதியருக்குத் தம் அருமை மகளைத் திருமணம் செய்து கொடுக்கச் சம்மதித்துத் திருமண ஏற்பாடுகள் எல்லாம் செய்கிறார். மிக்க சிறப்பாகத் திருமணம் . நடக்கிறது. மணமக்களை ஊஞ்சலில் வைத்து லாலி பாடுகிறார்கள்