பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/101

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

99

அவளைக் கங்கை முத்துத் தேவர் என்பவர் மணக்கிறார். அவளுக்கோ முருகனிடத்தில் அபார பக்தி. ஆதலால், துறவறம் பூண்டு செவ்விய நெறியிலே வாழ்கிறாள். தன் கணவன் இறந்த பின் தன் சொத்து அத்தனையையும் திருமலை முருகனுக்கே சாஸனம் செய்து கொடுத்து விடுகிறாள். அவள்தான் இக்கோயிலைக் கட்ட முனைந்திருக்கிறாள். மலையடிவாரத்தில் உள்ள வண்டாடும் பொட்டல் என்ற இடத்திலே ஒரு சத்திரம் அமைத்து, அதில் இருந்து மலைக்கு வருபவர்களுக்கு ஆகாரமும் நீர்மோரும் கொடுத்திருக்கிறாள். மலைமேல் செல்கிறவர்கள் கையில் ஆளுக்கு ஒரு செங்கல்லும், ஒரு ஓலைப் பெட்டியில் கொஞ்சம் சுண்ணாம்பும் கொடுத்து மலை மீது எடுத்துச் செல்லச் சொல்லியிருக்கிறாள்.

இந்த விதமாகவே செங்கல்லும் சுண்ணாம்பும் மலை மீது வந்து குவிந்து, கோயில் உருவாகியிருக்கிறது - (இன்றும் மலை மேல் நடக்கும் திருப்பணிக்குச் செங்கல்லை ஆண்களும் பெண்களும் சுமந்து செல்கிறார்கள். நூறு செங்கற்கள் கொண்டு செல்ல ஆறு தடவை மலை ஏறவேண்டியிருக்கிறது. அதற்குக் கூலி ரூ 1.25 என்கிறார்கள். ஆம். அன்று மதுரையில் உள்ள சொக்கலிங்கம் பிட்டுக்கு மண் சுமந்தார். இன்றோ நம் மக்கள் துட்டுக்கு மண் சுமக்கிறார்கள்!)

இப்படித்தான் திருமலைக் குமரன் கோயில் சிவகாமி ஆத்தாளால் முதலில் உருவாகியிருக்கிறது. அவள் கனவில் முருகன் தோன்றி, தனக்குச் சேரவேண்டிய சொத்தும் அதற்குரிய சாஸனமும் எங்கே புதைந்து கிடக்கிறது என்பதையும் சொல்லி இருக்கிறான்.