பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/113

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

111

விரையலாம். இப்பிராகாரத்தில் தென்பகுதியில் மேற்குக் கோடியில் உத்சவமூர்த்திகளாக இருவரும் சிறிய வடிவிலே ஒரு சிறு அறையில் எழுந்தருளியிருக்கின்றனர். இரண்டும் ஒன்றரை அடி உயரமே உள்ள செப்புப் படிமங்கள். அழகு வாய்ந்தவைகளாக இல்லை. இவர்கள் வெளியில் உலா வருவதில்லை. ஆடிச்சுவாதியில் சுந்தரர் கயிலை சென்றதன் ஞாபகார்த்தமாக அன்று திருமஞ்சனம் ஆட்டப் பெறுகிறார்கள். இவர்கள் இருவரையும் வணங்கிவிட்டே மேல் நடக்கலாம்.

மேற்கு பிராகாரத்தைச் சற்றிக்கொண்டு, வடக்குப் பிராகாரத்திற்கு வந்தால், அங்கு நடராஜர் சந்நிதி இருக்கிறது. அவரே திருவஞ்சிக்குளம் சபாபதி. அப்படித் தானே அந்தப் பீடத்தில் பொறித்திருக்கிறது? இவர் விரித்த செஞ்சடை யான் அல்ல.

பாண்டிய நாட்டு நடராஜர்களைப் போல் பின்னு செஞ்சடை உடையவரே. இவரே சேரமான் வழிபட்ட மூர்த்தி என்கின்றனர். இங்குள்ள சுவர்களில் ஓவியங்கள் தீட்டப் பெற்றிருக்கின்றன. எதுவும் கவர்ச்சி உடையதாக இல்லை . இனி பிரதான கோயில் வாயிலுக்கு வரலாம். திரு அஞ்சைக்களத்து அப்பன் கருவறை பெரிதுதான். கிழக்கு நோக்கிய வாயில் வழியாக அங்குள்ள லிங்கத் திரு உருவைத் தரிசிக்கலாம், மிகவும் சிறிய திருமேனி.

இக்கருவறை மேல் உள்ள விமானம் மரத்தால் ஆக்கப்பட்டு செப்புத்தகடு வேய்ந்ததாக இருக்கிறது, இங்கு அம்மைக்குத் தனி சந்நிதி இல்லை. என்ன இவர் அம்மை இல்லா அப்பனோ என்று கேட்டால், இல்லை. செப்புப் படிமமாக ஒரு சிறு அம்மையையும் அப்பன் பக்கத்திலே வைத்துக் காட்டுவர். அங்குள்ள இருட்டில் விளக்கமாக ஒன்றும் தெரியாது.