பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/122

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

வேங்கடம் முதல் குமரி வரை

முதல் இப்பத்தினிக் கடவுளுக்கு கோயில் எடுப்பித்தவன் சேரன் செங்குட்டுவனே. அந்தக் கண்ணகி பிரதிஷ்டைக்கு கடல் சூழ் இலங்கைக் கயவாகு மன்னனும் வந்திருந்திருக்கிறான். பின்னர் அவனே கண்ணகி வழிபாட்டை இலங்கையிலும் ஆரம்பித்திருக்கிறான். அவனுடன் வஞ்சிக்கு வந்த பௌத்தர்கள் சும்மா இராமல் தங்கள் சமயப் பிரசாரத்தையும் ஆரம்பித்திருக்க வேணும்.

அதனால் அன்றைய சேர நாட்டு மக்கள் பௌத்தர்கள் பேரில் கோபமுற்று அவர்களைத் திட்டிப் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். கேரள நாட்டில் அந்தப் பாடல்கள் பிரசித்தம். இன்னும் கொடுங்கோளூர் கோவிலுக்கு வரும் பௌத்தர்களை, கேரள மக்கள் பச்சை பச்சையாகத் திட்டி பாடல்கள் பாடுகிறார்களாம். நல்ல காலம்! நான் அங்கு போயிருந்த போது பௌத்தர்கள் ஒருவரும் வரவில்லை. அந்த திட்டுகளையும் கேட்க முடியவில்லை.

பராசக்தியின் அம்சமே காளி, பகவதி என்பவள் எல்லாம். வேண்டுவார் வேண்டுவன எல்லாம் தருபவள் அவள். அதே சமயத்தில் தவறு செய்தால் அவர்களைத் தண்டிக்கவும் அவள் தவறுவதில்லை. அதனாலேயே அவளை கண்கண்ட தெய்வமாக மக்கள் வழிபடுகின்றனர். இக்கண் கண்ட தெய்வங்களின் ஜாபிதாவை ஒரு புரட்டு புரட்டினால், அங்கு திருச்செங்குன்றூர் பகவதி, கொடுங்கோளூர் ஒற்றை முலைச்சி, கருவூர் வஞ்சி, ஒற்றியூர் வட்டப் பாறை அம்மன், நாகப்பட்டினம் பத்திரகாளி, நாட்டரசன் கோட்டை. கண்ணாத்தாள், முப்பந்தல் பேச்சி, ஆலங்காட்டுக் காளி எல்லோருமே வருவர். கொடுங்கோளூர் ஒற்றை முலைச்சி என்றும் கொடுங்கோளூர் பகவதி பெயர் பெற்றிருக்கிற காரணத்தால், அவளே அந்தச் சிலப்பதிகார காவிய நாயகி கண்ணகி என்றும் தெளியலாம். அந்த பத்தினித் தெய்வத்திற்கு வணக்கம் செலுத்தி ஊர் திரும்பலாம்.