பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/123

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
16. குருவாயூர் அப்பன்

சித்திரை விஷு என்னும் சித்திரை மாதப் பிறப்பு தமிழ் வருஷப் பிறப்பாகக் கருதப்படுகிறது. என்றாலும் தமிழ் மக்கள் பொங்கலைக் கொண்டாடுகிற அளவுக்கு இந்தத் தமிழ் வருஷப் பிறப்பைக் கொண்டாடுகிறதில்லை. ஆனால் மலையாளிகளுக்கே சிறப்பான விழா இந்த விஷு தான். வருஷப் பிறப்பை அவர்கள் எவ்வாறு கொண்டாடுகிறார்கள் தெரியுமா! அதற்கு முந்திய நாள் இரவே வீட்டையெல்லாம் நன்றாகக் கழுவி சுத்தம் செய்து வீட்டின் நடுக் கூடத்தில் அரிசி காய்கறிகளை எல்லாம் சேமித்து வைத்து அத்துடன் பட்டுப் புடவைகள், தங்க நகைகளையும் வைத்து, குத்து விளக்குகளும் ஏற்றி விடிந்து எழுந்ததும் கண்ணை மூடிக் கொண்டே இந்நடுக் கூடத்திற்கு வந்து முதல் முதல் இந்த நல்ல சாமான்களையே பார்ப்பர்.

வீட்டில் உள்ள குழந்தைகளை எல்லாம் வீட்டில் உள்ள பெரிய அம்மா கண்களை கைகளால் பொத்தி அழைத்து வந்து சாமான்கள் வைத்திருக்கும் நடுக் கூடத்திற்கு வந்த பின்னே, கண்களைத் திறப்பர். வழியில் கண்களைத் திறந்து மற்ற சாமான்களைப் பார்த்து விடக் கூடா தல்லவா? இந்தச் சாமான்களோடு அவரவர் வீட்டில் பூஜையில் இருக்கும் படங்களையும் சேகரித்து வைத் திருப்பர்.

இவற்றையெல்லாம் விட, தமிழ் வருஷப் பிறப்பன்று முதல் முதல் குருவாயூரப்பன் முகத்தில் விழிப்பது அந்த வருஷம் முழுவதும் நல்ல பலனைத் தரும் என்ற நம்பிக்கை காரணமாக, அதற்கு முந்தியே மக்கள் ஆண்களும் பெண்களும் ஆயிரக்கணக்காக குருவாயூர் கோவிலில் சென்று அதன் பிராகாரங்களில் படுத்துக்கிடப்பர். காலை இரண்டு அல்லது மூன்று மணிக்கு