பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/125

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

123

காட்சியாக இருக்கும். கோயிலுக்கு இடப்புறமாகவே சென்று, அங்கு தேவஸ்தானத்தார் கட்டி வைத்திருக்கும் தேவஸ்தானச் சத்திரத்திற்கு முதலில் போய்ச் சேரலாம். சேவார்த்திகள் பெருகப்பெருக சத்திரத்து வசதிகளும் பெருகிக் கொண்டே இருக்கின்றன. அங்கு தங்கி, ஸ்நானம் எல்லாம் முடித்து விட்டு, உடுத்திய வேட்டி துண்டுடனே தான் கோயிலுக்கு புறப்பட வேணும்.

கோயில் சிறிய கோயில்தான் என்றாலும், கோயில் வாயிலில் ஒரு யானையும், கோயில் பிராகாரத்தில் மூன்று நான்கு யானைகளையும் பார்க்கலாம். வேழம் உடைத்து மலை நாடு என்றல்லவா பாடினாள் ஔவை. யானைகளையே எழுந்திருத்து முதலான காரியங்களுக்கு உபயோகப் படுத்துவதால் ஒன்றுக்கு நான்காக யானைகள் இருக்கின்றன இங்கே. கோயில் வாயிலில் எல்லாம் கோபுரம் ஒன்றும் இருக்காது. மரத்தால் தட்டுத் தட்டாகக் கட்டி ஓடு போட்ட கூரை வேய்ந்திருக்கும். அந்தக் கூரையையும் முந்திக்கொண்டு பெரிய தகரக் கொட்டகை ஒன்று இருக்கும்.

இந்தக் கொட்டகையைக் கடந்து வாயிலுக்கு வந்து அதனையும் கடந்தே உள்ளே வரவேணும், பகலானாலும் சரி, இரவானாலும் சரி, கோயிலுள் கூடி இருக்கும் மக்கள் எல்லாம் 'நாராயணா, நாராயணா' என்று பகவந் நாம் ஸ்மரணை செய்து கொண்டே நிற்பர். இந்த நாராயண ஸ்மரணையைத் தவிர வேறு ஒலியையே கேட்கமுடியாது. அன்றே பாடினானே திருமங்கை மன்னன்,

குலம் தரும், செல்வம் தந்திடும்
அடியார் படுதுயர் ஆயின எல்லாம்
நிலந் தரம் செய்யும், நீள் விகம்பு அருளும்
அருளொடு பெருநிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்.