பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/128

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

வேங்கடம் முதல் குமரி வரை

கோயில் அதிகாரிகள் பெற்றுக் கொள்வர். பிறந்த குழந்தைக்கு ஒரு வயதானதும், அமுதூட்டவும், குருவாயூரப்பன் கோவிலை நாடிவருபவர் பலர். கோவிலில் கொடுக்கும் தீர்த்தம் நைவேத்யம் முதலியவற்றை முதலில் குழந்தைக்குக் கொடுத்து, அதன்பின் அன்னம் கொடுப்பர். திருமணங்களையும் குருவாயூரப்பன் சந்நிதியிலேயே நடத்துவர் சிலர். இதற்கெல்லாம் கோவிலுக்கு கட்டணங்களும் செலுத்த வேணும்.

எல்லாம் சரிதான். குருவாயூரப்பன் அருளைப் பற்றி சிறப்பாகச் சொல்வார்களே, அதைப்பற்றி ஒன்றுமே சொல்லக் காணோமே என்றுதானே கேட்கிறீர்கள். ஆதியிலே, இங்கு எழுந்தருளியிருக்கும் மூர்த்தியை பிரம்மா மகாவிஷ்ணுவுக்குக் கொடுத்திருக்கிறார். பின்னர் அதை அவர் கச்யபருக்குக் கொடுக்க அவர் அதனை கண்ணனைப் பெற்றெடுத்த தேவகி வாசுதேவருக்குத் கொடுத்தார் - என்பது பாகவத வரலாறு. பின்னர் உத்தவர் இதனைப் பெற்றிருக்கிறார். அதன் பின் கலியுகத்தில் மக்கள் எல்லாம் உய்ய உத்தவர் குருவிடமும் வாயுவிடமும் கொடுத் திருக்கிறார்.

இவர்களே இந்த நாராயணனை மான்மியூர் என்று அன்று வழங்கிய இந்தப் பிரதேசத்தில் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். இப்படி குருவும் வாயுவும் சேர்ந்து கொண்டுவந்த காரணத்தாலேயே இவன் குருவாயூர் அப்பன் என்ற பெயரில் இங்கு எழுந்தருளியிருக்கிறான். சந்திரவம்சத்து அரசனான பரீக்ஷித்து பாம்புகளைப் பழிவாங்க, அந்த பரீஷித்துவின் மகனான ஜனமேஜயன் நாகங்களுக்கு அஞ்சி வாழ்கிறான். நாகயக்ஞமே செய்கிறான். கடைசியில் அவனை, குட்டம் என்னும் நோய் பிடித்துக்கொள்கிறது. என்ன பண்ணியும் நீங்காத குட்டம் குரு வாயூரப்பனை வழிபட்டதாலே தீர்ந்தது என்பது வரலாறு.

இந்த குருவாயூரப்பனுக்கு மதில்களோடு கூடிய கோயில் எடுப்பித்தது ஒரு பாண்டிய மன்னனே. அவனும் பாம்பொன்றால் தீண்டப் படுவான் என்று புரோகிதர்கள்