பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/142

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

வேங்கடம் முதல் குமரி வரை

வடஆர்க்காடு மாவட்டத்திலே - பள்ளிகொண்டான் என்னும் தலத்திலே வெண்ணெய் கிடைத்த மகிழ்ச்சியிலே தாண்டவம் ஆடும் நவநீத தாண்டவன் வடிவம் சிறப்பாயிருக்கிறது.

இப்படி சிவன், விஷ்ணு, விநாயகர் எல்லாம் தாண்டவம் ஆடும்போது, எப்போதுமே இன்னிசை வீணை ஏந்தி நிற்கும் ஏழிசைவல்லபியான சரஸ்வதியால் சும்மா இருக்க முடியுமா. அவளுமே தாண்டவம் ஆட முனைந்து விடுகிறாள். இந்த தாண்டவ சரஸ்வதியைத் தமிழ் நாட்டுக் கோயில்களில் நான் காணவில்லை. இவளைக் காண ஒரு நடையே நடந்தேன். மைசூர் ராஜ்யத்திலே உள்ள ஹொய்சலர் கோயிலான பேலூர் சொன்னக் கேசவர் கோயிலிலே நவரங்க மண்டபத்திலே இவள் நடனமாடிக் கொண்டிருக்கிறாள், வீணை ஏந்திய கரத்தோடு தாளம் தவறாமல், இவளது தாண்டவக் கோலம் மிக்க அழகு வாய்ந்தது. நுணுக்க வேலைப்பாடுகள் நிறைந்தது.

இப்படித் தேவ தேவியர் எல்லாம் தாண்டவம் ஆடும்போது, பக்தர்களில் எல்லாம் சிறந்த பக்த மணியான சீர்காழித் திருஞான சம்பந்தரும், ஞானப்பால் உண்ட மகிழ்ச்சியிலே தாண்டவமாடிக் கொண்டே கிளம்பி விடுகிறார். அந்தத் தாண்டவக் கோலத்தையுமே பார்க்கிறீர்கள் பக்கத்திலே. இவரே தாண்டவ சம்பந்தர். இவர் இருப்பது நெல்லை சாலிவாடீஸ்வரர் கோயிலிலே.

இந்த நவதாண்டவ வடிவங்களைக் கண்ட மகிழ்ச்சியிலே எனக்குக் கூட தாண்டவம் ஆடும் ஆசை பிறக்கிறது. நீங்களும் தாண்டவம் ஆடிக் கொண்டே கிளம்பினால் அது அதிசயமில்லைதான். ஆம், ஹாவ்லக் எல்விஸ் என்பவன், "வாழ்வே ஒரு தாண்டவம்தான்! மரங்களும், மாக்களும், மக்களும் தாண்டவம் ஆடியே உணர்ச்சிகளை வெளிப்படுத்தத் தெரிந்திருக்கிறார்கள்“ - என்று தானே கூறுகிறான்?