பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

வேங்கடம் முதல் குமரி வரை

இந்த அருமையை எல்லாம் நன்கு உணர்ந்திருக்கிறான். கவிச் சக்ரவர்த்தி கம்பன். பூமாதேவி எனும் தெய்வம் தன்னை உழுது வழிபடுபவர்க்கெல்லாம் அருள் புரிய விரைந்து வருகிறாள். அவளது அழகான மேனியிலிருந்தே பச்சைப் பசுங் கதிர்கள் எழுந்து பிரகாசிக்கின்றன. அவள் தன் உண்மை உருவை ஏதோ பூமிக்குள்ளேயே ஒளித்து வைத்துக் கொண்டு வழிபடுபவர்களுக்கு மட்டும் தன் உண்மை உருவை காட்டுகின்றாள். அப்பூமாதேவியின் அம்சமான சீதா தேவியும் உழுகின்ற கொழுமுகத்தில் தானே உதிக்கிறாள்? யாகம் ஒன்று செய்ய ஜனக மகாராஜன் நிலத்தைப் பண்படுத்தி அதனை உழ, அங்கு சீதாதேவி தோன்றினாள் என்பது வரலாறு. இதைச் சொல்கிறான் கம்பன்.

உழுகின்ற கொழுமுகத்தின்
உதிக்கின்ற கதிரின் ஒளி
பொழிகின்ற புவிமடந்தை
உருவெளிப் பட்டெனப் புணரி
எழுகின்ற தெள்ளமுதோடு
எழுந்தவளும் இழிந்து ஒதுங்கி
தொழுகின்ற நன்னலத்துப்
பெண்ணரசி தோன்றினாள்

என்பது பாட்டு. இப்படி அருமையினும் அருமையாகப் பாராட்டப்படுகின்ற பூமாதேவியை அழித்துச் சிதைத்துவிடச் செய்யும் அக்கிரமமும் நாட்டில் நடக்கத் தானே செய்கிறது. ஒரு கதிர் உதிக்கின்ற இடத்திலே இரண்டு கதிர் உதிக்கச் செய்கின்றவன் உலக வளர்ச்சிக்குத் துணை புரிகின்றவன் என்று பாராட்டுகிறோம்.

ஆனால் இந்த உலகத்தையே சிதைத்து விட அணுகுண்டு பரிசோதனைகளும், மற்ற அக்கிரமங்களும் செய்கின்றவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்?