பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

19

ஆச்சர்யப் படத்தக்கதாகவும் இருக்கிறது. இந்நூற்றுக்கால் மண்டபத்திலே நம்மாழ்வார் சந்நிதி இருக்கிறது. ஞான முத்திரை தாங்கி நம்மாழ்வாரது செப்புச்சிலை சிறிதேயானாலும் அழகானது. அவரைத் தரிசித்த பின்னரே, இக்கோயிலின் சிறந்த சிற்ப வேலைகள் கொண்ட பதினாறு கால் மண்டபம் வந்து சேருவோம். அதனையே புருஷசூக்த மண்டபம் என் கிறார்கள்.

நல்ல நுணுக்க வேலைப்பாடுகள் நிறைந்த தூண்கள் இம்மண்டபத்தைத் தாங்கி நிற்கின்றன. இக்கோயிலைக் கட்டிய நாயக்க மன்னர்கள், அவர்கள் துணைவியர் சிலை எல்லாம் கற்றூண்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இம்மண்டபத்திற்கு வடபுறம் வேணுகோபாலன் சந்நிதி இருக்கிறது. அங்கு வேணு கோபாலன் ருக்மணி சத்யபாமா சகிதம் சிலை உருவில் நிற்கிறான். பக்கத்திலே நர்த்தன கோபாலனும் நடனம் ஆடிக்கொண்டே இருப்பான். பதினாறுகால் மண்டபத்தைக் கடந்தே பிரதான கோயிலுள் நுழைய வேணும். அங்குள்ள மகா மண்டபத்தைக் கடந்து, அர்த்த மண்டபம் சென்று, அதன் பின் கருவறையில் உள்ள பூவராகனைத் தரிசிக்க வேணும். கருவறை யின் நடுவிலே பூவராகர் சிலை உருவில் நிற்கிறார்.

இந்த மூர்த்தி சுமார் மூன்றடி உயரமே உள்ளவர். சாளக் கிராமம் என்னும் உயர்ந்த சிலை வடிவினர். இரண்டே திருக்கரங்களுடன் கம்பீரமாக இடுப்பிலே கை வைத்துக் கொண்டு மிடுக்காகவே நிற்கிறார். அப்படி வைத்திருக்கும் கைகளிலே சங்கையும் சக்கரத்தையும் ஏந்தியிருக்கிறார். உடல் முழுவதும் மேற்கு நோக்கி இருந்தாலும், தெற்கு நோக்கி நிமிர்ந்தே நிற்கிறார். அவர் காலடியிலே ஸ்ரீதேவியும் பூதேவியும் சிறிய வடிவிலேயே எழுந்தருளியிருக்கின்றனர்.