பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

23

பாத்தியதை பெற்றவள் என்று. ஆதலால் பரதனிடம் தன் பாதரட்சை ஒன்றும் தன் துணைவி சீதையின் பாதரட்சை ஒன்றையுமே கொடுத்திருக்கிறார்.

இதை வால்மீகி, கம்பர், துளசி எல்லோருக்கும் தெரியாமலேயே மறைத்தும் வைத்திருந்திருக்கிறார் என்றாலும் ஸ்ரீமுஷ்ணத்து பட்டாபிஷேக ராமரை உருவாக்கிய சிற்பியிடம் இதை மறைக்க முடியவில்லை இராமனுக்கு. அவன் எப்படியோ இந்த ரகசியத்தை அறிந்து அதை அம்பலப்படுத்தியிருக்கிறான். அவ்வளவு தான். இதை வைத்து ஒரு ‘பாதுகா பிரபாவமே' பாடலாம் போலிருக்கிறது! பாதுகா சஹஸ்ரம் எல்லாம் பாடத் தெரிந்தவர்கள்தானே, கவிஞர்கள், கலைஞர்கள்?

"~“எல்லாம் சரிதான்! - பூவராகன் என்றீர், யக்ஞ வராகன் என்றீர், போக நாராயணன் என்றீர், இத்தலம் ஸ்ரீமுஷ்ணம் என்று ஏன் பெயர் பெற்றது என்று கூறவில்லையே?" என்றுதானே கேட்கிறீர்கள்? அதையும் சொல்லி விடுகிறேன். ஹிரண்யாட்சன் கதையை முன்னமே கேட்டிருக்கிறோம். அவனுடைய செல்வம், ஆயுள், புகழ் எல்லாவற்றையும் அபகரித்து ஸ்ரீதேவியைக் காப்பாற்றியதால் ஸ்ரீமுஷ்ணம் எனப் பெயர் வந்தது என்கிறார்கள்.

இத்தலத்தில் இன்னொரு விசேஷம், இக்கோயிலை அடுத்த கீழ்புறத்தில் ஒரு சிவன் கோயில் உள்ளது அங்குள்ள இறைவன் பெயர் நித்தீச்சுரர். பூவராகனும் நித்தீச்சுரரும் ஒருவரையொருவர் பாராது ஒருவர் முதுகுப் புறத்திலே ஒருவர் முதுகைக் காட்டிக் கொண்டு நிற்கிறார்கள். நமக்கு முன்னமேயே தெரியும் கம்பன் பிறந்த ஊராகிய தேரழுந்தூரிலே வேதபுரி ஈஸ்வரரும் ஆமருவி அப்பனும் ஒருவரை ஒருவர் எதிர்நோக்கி சௌஜன்யமாக நிற்கிறார்கள் என்று. இங்கு ஏன் பிணங்கிக் கொண்டு