பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2. திருவலத்து வல்லநாதர்

றைவனைத் தேடி மனிதன் செல்கிறானா, இல்லை மனிதனைத் தேடி இறைவன் வருகிறானா என்று ஒரு கேள்வி. உண்மைதான். நம் நாட்டில் தோன்றிய அடியார்கள் பலரும் இறைவனைத் தேடி ஓடி இருக்கிறார்கள். அவன் பாதங்களைக் கட்டிப்பிடித்து, 'சிக்கெனப் பிடித்தேன்: எங்கெழுந்தருளுவதினியே' - என்று கதறியிருக்கிறார்கள்.

இதைப் போலவே இறைவனும் தன்னிடமிருந்து விலகி, பொன்னையும், பொருளையும், மண்ணையும், பெண்ணையும், மக்களையும் மனையையும் நினைத்து ஓடிக்கொண்டிருக்கும் மனிதனை, சரி அவன் அப்படியே போகட்டும் என்று விட்டுவிடுகிறானா? இல்லை. அப்படி விலகி விலகி ஓடும் மனிதனையும் தொடர்ந்தே ஓடிவந்து அவனுக்கும் அருள் புரிபவனாக இருக்கிறான் இறைவன். அப்படித்தானே பாடினான் பிரான்ஸிஸ், தாம்ஸன் என்ற அறிஞன், 'அருள்வேட்டை' என்ற பாடலிலே. இறைவன் தன்னைவிட்டு விலகி ஓடும் மனிதனை வேட்டை நாயுருவில் துரத்தி வந்து பிடித்து அருள் புரிகிறான் என்பதுதானே அவனது கற்பனை. இதே கற்பனையை இந்த தாம்ஸனுக்கு ஆயிரத்து முந்நூறு வருஷங்களுக்கு முன்னே தமிழ் நாட்டில் தோன்றிய அப்பர் பெருமான்,

சொல்லாதன எல்லாம் சொல்லி
அடியேனை ஆளாக் கொண்டு
பொல்லா என் நோய் தீர்த்த புனிதன்