பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

வேங்கடம் முதல் குமரி வரை

என்றுதானே பூந்துருத்தி புஷ்பவன நாதரைப் பாராட்டிப் பாடியிருக்கிறார். இந்தச் செய்தி, வரலாறு எல்லாம் எனக்கு வட ஆர்க்காட்டில் உள்ள திருவலம் என்னும் தலத்திற்குச் சென்றிருந்தபோது ஞாபகத்துக்கு வந்தது. அத்தலத்தைப் பற்றிய வரலாறு இதுதான்:

அன்றொரு நாள் நாரதர் ஒரு கனியைக் கொண்டு வந்து சிவபிரானிடம் கொடுக்கிறார். அந்தச் சமயத்தில் உமை யுடன் புதல்வர் இருவருமே வருகிறார்கள். இருப்பது ஒரு கனி. அதை யாருக்குக் கொடுப்பது என்பது பிரச்சனை இப்போது.

இப்பிரச்சனைக்கு முடிவுகாண சிவபெருமான் மக்களுக்குள்ளே ஒரு போட்டியை ஏற்படுத்துகிறார். இந்த அகண்ட அண்டம் முழுவதையும் யார் முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களே கனியைப் பெறுவார்கள் என்று தெரிவிக்கிறார். சரி என்று போட்டியில் முனைகிறார்கள் இருவரும். முருகன் நினைக்கிறான், வெற்றி நமக்குத் தான் என்று. தன் மயில் மீது ஏறிக்கொண்டு ககன வீதியில் புறப்பட்டு விடுகிறான்.

ஆனால் மூத்த பிள்ளை பிள்ளையாரோ தன் வாகனமான மூஞ்சூறுவைக் கூடத் தேடவில்லை. விறு விறு என்று தன் அன்னையையும் அத்தனையுமே ஒரு சுற்றுச் சுற்றி வருகிறார். கனிக்கு கையை நீட்டுகிறார். 'என்னடா? அண்டங்களை எல்லாம் சுற்றியாகி விட்டதா?' என்று தந்தை கேட்கிறார். இதற்குச் சளைக்கவில்லை அந்தப் பிள்ளையார். 'அண்டங்கள் எல்லாம் தோன்றி நின்று ஒடுங்குவது உங்களிடம்தானே! உங்களைச் சுற்றி வந்தால் இந்த அண்டங்களையே சுற்றிய தாகாதோ?' என்று எதிர்வாதம் செய்கிறார்.