பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

35

கட்டிட அமைப்பும் கோபுர வாயில் அமைப்பும் என்றேன். நண்பரின் மனைவி இதைக்கேட்டு அப்படியே அதிசயித்து நின்றாள். நண்பர், “இது அவ்வளவு பெரிய விஷயமல்ல தொண்டைமான், கொஞ்சம் விஷயம் அறிந்தவன் கோயிலைக் கட்டி இருக்கிறான். அவன் ஒரு சிறந்த கலைஞனாகவே இருக்க வேண்டும். தன் கற்பனைக்கு ஒரு நல்ல உருவம் கொடுத்து ஒரு கோயிலை கட்டத் தெரிந்திருக்கும் அவனுக்கு நாம் தலை வணங்க வேண்டியதுதான் என்று பாராட்டிவிட்டு மேல் நடந்தார்.

கோயிலில் வெளிப்பிராகாரத்தைக் கடந்து அடுத்த பிராகாரத்துள்ளே நுழைந்த உடனே அங்கே ஒரு தனிக் கோயில் நடராஜருக்கு. அக்கோயிலை தேர்போல் அமைத்து அத்தேரின் முன்பக்கம் இரண்டு யானைகள் தேரை இழுப்பதுபோல ஒரு அமைப்பு. அதை விட தேரின் இருபக்கத்திலும் இரண்டு சக்கரங்கள். தேரினை இழுத்துக் கொண்டு ஓடுவது போல் ஒரு பாவனை.

உடன் வந்த நண்பர்களைக் கொஞ்சம் கண்மூடி மூடித் திறக்கச் சொன்னேன். அப்படியே செய்து விட்டுச் சொன்னார்கள், தொண்டைமான் அப்படி கண்ணை மூடிமூடித் திறந்தால் தேர் ஓடவே ஆரம்பித்து விடுகிறது, தேரின் கீழ் சிக்கிவிடக் கூடாதே என்று பயமாக வேறு இருக்கிறது என்றார்கள். அவ்வளவு தத்ரூபமாக தேர் அமைந்திருக்கிறது. எல்லாம் கல்லில், அதன் பின் நடராஜர் சந்நிதிக்கே நண்பர்களை அழைத்துச் சென்றேன். கிட்டதட்ட 5,6 அடி உயரத்தில் நடராஜர் கம்பீரமாக எழுந்து நிற்கிறார், செப்புச் சிலை வடிவில். சிவகாமியும் 5 அடி உயரத்தில் நிற்கிறாள்.