பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

39

களாக அவர்கள் நிற்கின்றனர். காதிலே அணிந்துள்ள விராட குண்டலங்களும், இடுப்பில் அணிந்துள்ள அந்தரீயமும், காலிலே அணிந்திருக்கும் சலங்கையும் ஒலிக்கும் ஒலியையே கேட்கிறோம் நாம். மார்பகத்தை மூடாது, மலையனைய முலை காட்டி மாரனையே பொர விடும் மங்கையராக அல்லவா அவர்கள் நிற்கிறார்கள்? இவர்களைக் கண்ட பின்,

நடந்தாள் ஒரு கன்னி மாரச
கேசரி நாட்டில், கொங்கைக்
குடந்தான் அசைய, ஒயிலாய்,
அது கண்டு, கொற்றவரும்
தொடர்ந்தார், சந்நியாசிகள் யோகம்
விட்டார், சுத்த சைவரெலாம்
மடந்தான் அடைத்து சிவபூசையும் -
கட்டி வைத்தனரே!

என்று கவிஞன் ஒருவனுக்கு பாடத் தோன்றினால் வியப்பே இல்லை. இந்த இரண்டு சலபாஞ்சிகை சிற்பவடிவங்களைக் காணவே ஒரு நடை போகலாம் திரிபுவனத்திற்கு.

சரி, போகிறதே போகிறோம் அங்குள்ள மற்ற சிற்ப வடிவங்களையும் காணாமல் திரும்ப இயலுமா என்ன? கோயிலை மூன்று வாயில்கள் அழகு செய்கின்றன.