பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை
ரா. ஜகத்ரட்சகன்

கோயில்கள், சிற்பங்கள், செப்பு படிமங்கள், விக்ரகங்கள் என்றாலே பாஸ்கரத் தொண்டைமான் பெயர் நினைவுக்கு வரும். அவர் எழுதிய 'வேங்கடம் முதல் குமரி வரை' என்ற நூல் நான்கு பகுதிகளாக வெளிவந்தது அனைவரும் அறிந்ததே. இந்நான்கு பகுதிகளுக்கும் அவர் சூட்டிய பெயரே அன்னாரது தமிழிலக்கிய ரசனையை வெளிப்படுத்தும். அப்பெயர்கள் முறையே 'பாலாற்றின் மருங்கிலே', 'காவிரிக் கரையிலே', 'பொன்னியின் மடியிலே', 'பொருநைத் துறையிலே' ஆகும். இதன் மூன்று பதிப்புகள் வெளிவந்தமை தமிழ் மக்களிடையே இக்கட்டுரைகள் பெற்ற பெரும் வரவேற்பைக் காட்டும். இந்நூலிலே இரு நூற்றுக்கும் அதிகமான தமிழ்நாட்டுக் கோயில்களை, கலை வளங்களை நமக்குக் காட்டிய பாஸ்கரத் தொண்டைமான், 'வேங்கடத்துக்கு அப்பால்' என்ற நூலிலே வட இந்தியாவின் பகுதிகளில் உள்ள கோயில்களைப் பற்றியும் விவரங்கள் அளித்துள்ளார். இவற்றைப் படித்த பலருக்கு அக்கோயில்களை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் தோன்றியது. அவற்றையே கையேடுகளாகக் கொண்டு சென்ற 45 ஆண்டுகளாக தல யாத்திரை செய்து வருபவன் நான்.

பார்த்ததை பார்த்தபடியே விவரிக்கும் அவருடைய நடை சுவையானது. நேரில் பேசுவதைப் போன்ற அனுபவத்தை அது தோற்றுவிக்கும். அனைத்துத் தலங்களுக்கும் நேரிலே சென்று, கண்டு, ரசித்து, மகிழ்ந்து புகைப்படத்துடன் அக்கலைச் செல்வங்களை தன் சொற்களால் விவரித்த பாணி அனைவரையும் சுவர்ந்தது. கல்லாலும், உலோகத்தாலும் ஆன இறைவனின் திருமேனியை, அணிகலன்களையும் புஷ்பங்களையும் இட்டு