பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

55

அடியுங்கள். அவ்வளவுதான். உங்கள் முன்னால் எட்டடி உயரத்தில் வராகமூர்த்தி ஆஜானுபாகுவாய் காட்சியளிப்பார். சங்கு சக்கரதாரியாக அவர் எழுந்து நிற்கின்ற திருக்கோலமும், அவரது மடியிலே கூப்பிய கையுடன் பூமாதேவி இருக்கின்ற நேர்த்தியும் பார்க்கப் பார்க்கப் பரவசத்தையே தரும். மூர்த்தியின் தூக்கிய திருவடிக் கீழ் அரக்கன் குன்றி நிற்பதையும் பார்க்க மறந்து விடாதீர்கள். அடடே, எவ்வளவு அருமையான சிற்பம்! இந்த இருட்டறைக்குள்ளே ஒளிந்து கிடப்பானேன்?

அதை உலகுக்கு, ஆம், தமிழ் உலகத்துக்குத்தான் எடுத்துக் காட்ட பரந்தாமனது. வராக அவதார மகிமையை எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டாமா? நெருஞ்சி முள் காலில் தைத்தாலும் மூர்த்தியைக் கண் குளிரத் தரிசிக்கும் பாக்கியம் உங்களுக்குக் கிட்டி விடுகிற தல்லவா?

“எண்ணாயிரம்' பேரே அழகாக இருக்கிறது. வாய் நிரம்பவும் இருக்கிறது. இந்தப் பெயர் இந்தச் சிற்றூருக்கு வருவானேன்? கிராமத்தாரிடம் கேட்டால் இங்குதான் எண்ணாயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்டார்கள்; அதனால்தான் எண்ணாயிரம் என்ற பேர் நிலைத்தது என்பார்கள்.

ஆனால் கொஞ்சம் துருவி ஆராய்ந்தால் அதில் உண்மையில்லை என்று தெரியும். இந்தச் சிற்றூர் பல்லவர் ஆட்சியில் பருத்திக் கொல்லை என்ற பெயருடன் பிரபல மாயிருந்திருக்கிறது. இங்கே ஒரு பரம பாகவதர். அவருக்கு ஓர் அருமை மனைவி. இருவரும் அதிதிகளையும் சாதுக்களையும் உபசரிப்பதில் சிறந்தவர்கள். இருந்த பொருள் அத்தனையையுமே வாரி வாரி வழங்கி விடுகின்றனர்.