பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

வேங்கடம் முதல் குமரி வரை

இந்த அதிதி சத்காரத்தில் அவர்கள் செய்த வஸ்திர தானமோ சொல்ல முடியாது. கடைசியில் இருவருக்கும் மிஞ்சியது ஒரே ஒரு வஸ்திரமே. பாகவதர் உஞ்ச விருத்திக்கு வெளியில் சென்றால் அந்த நாச்சியார் வஸ்திரமின்றி வீட்டில் மறைந்திருப்பார், இறைவன் சோதனை பின்னும் கடுமையாயிற்று. உடையவர் ஸ்ரீபெரும் புதூரிலிருந்து திருவஹீந்திரபுரத்திற்குச் செல்லும் வழியில் பருத்திக் கொல்லை பரம பாகவதரின் பிரதாபத்தைக் கேள்விப்பட்டு தம் பரிவாரங்களுடனும் அடியவர்களுடனும் பருத்திக் கொல்லைக்கு எழுந்தருளுகிறார். அவர்கள் வரும் வேளையில் நாச்சியார், வீட்டில் வஸ்திரமின்றி மறைவில் இருக்கிறார்.

கணவரோ உஞ்சவிருத்திக்குச் சென்றிருக்கிறார். தம் வீட்டைத் தேடிவந்த உடையவருக்கும் அடியார்களுக்கும் மறைவிலிருந்தே முகமன் கூறி எல்லோரையும் நீராடி விட்டு உணவருந்த வரும்படி வேண்டிக் கொள்கிறார், நாச்சியார். நெருக்கடியான நிலைமை ஏற்பட்டு விட்டது.

நாச்சியார் கொஞ்சம் சிந்திக்கிறார். அவருக்குத் தெரியும் அவ்வூரில் உள்ள பணக்காரச் செட்டியார் ஒருவருக்குத் தம்மேல் ரொம்ப நாளாகக் கண் என்று. அவருக்குச் சொல்லியனுப்புகிறார். தம் கற்பையே விற்று அடியவர்களுக்கு உணவூட்டத் துணிந்து விடுகிறார். செட்டியார் வருகிறார். நாச்சியார் எண்ணத்தை அறிகிறார். உடனே வந்து, குவிகின்றன உடுக்க உடையும், உணவு தயாரிப்பதற்கு வேண்டிய சாமான்களும். செட்டியாரை இரவில் வந்து சேரும்படி நாச்சியார் சொல்லியனுப்பி விட்டார். உஞ்சவிருத்திக்குச் சென்ற பாகவதர் வந்தார். விஷயம் அறிந்தார். சந்தோஷம் அடைந்தார். உடையவர் பரிவாரத்திற்கு அருமையான விருந்தொன்று நடந்தது.