பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

வேங்கடம் முதல் குமரி வரை

தேவ இந்திரன் மகள் தேவயானையை மணந்தவன், பின்னர் காதலித்து மணக்கிறான் வள்ளியை, வடநாடு தென்னாடு இரண்டையும் இணைக்கும் முறையில் மட்டுமல்ல. தேவர்கள் - மக்கள் இவர்களையும் இணைக்கும் முறையில் அல்லவா இந்த வள்ளியை மணந்திருக்கிறான்! இந்தக் கதையை கச்சியப்பர் தாமியற்றிய கந்த புராணத்தின் கடைசிப் பகுதியாக அமைத்திருக்கிறார். அவர் சொல்லும் கதை இதுதான்.

திருச்செந்தூர் என்னும் திருச்சீரலை வாயிலே சூர சம்ஹாரம் முடித்து, திருப்பரங்குன்றத்திலே தெய்வயானையை மணந்து, அமைதியாகக் குடும்பம் நடத்த திருத்தணிகைக்கு வந்து சேர்கிறான் முருகன். திருத்தணிகைக்கு சில காத தூரத்திலே காடும் மலையுமான பிரதேசம் ஒன்றிருக்கிறது. அங்கு வேட்டுவக்குடி மக்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் தலைவனாய் நம்பிராஜன் இருக்கிறான். இவனுக்கு ஆண்மக்கள் எழுவர் இருக்கின்றனர். என்றாலும் பெண் குழந்தை இல்லையே என்று ஏங்குகிறான். அதற்காகத் தன் வழிபடு கடவுளான முருகனையே வேண்டுகிறான். முருகனது அருளால் ஒரு மானின் வயிற்றில் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தையை வள்ளிக் கிழங்கு எடுத்த குழியில் வைத்து விட்டு மான் ஓடி மறைந்து விடுகிறது.

அப்பக்கமாக வந்த நம்பிராஜன் அந்தக் குழந்தையைக் கண்டெடுத்து தன் மனைவியிடம் கொடுக்கிறான். வள்ளிக் கிழங்குக் குழியில் கண்டெடுத்த குழந்தையை வள்ளி என்றே அழைக்கிறான். அவளும் வளர்ந்து பதினாறு வயது நிரம்பிய பருவ மங்கையாகிறாள்.

வேடர் குல முறைப்படி அவளைத் தினைப் புனத்துக்கு நம்பிராஜன் அனுப்புகிறான். அவளும் தன்