பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

65

தோழியருடன் தினப்புனம் காவல் காத்து வருகிறாள். கிளிகளும், மயில்களும், பூவையும் புறாக்களும் தினை கொய்ய வந்தால் அவைகளை ஆலோலம் பாடி விரட்டுகிறாள். இந்த வள்ளியை நாரதர் பார்க்கிறார். இந்த அழகியை அடைய வேண்டியவன் அந்த முருகனான தலைவனே அல்லவா - என்று நினைக்கிறார்.

உடனே அவர் தன்னையே பாங்கனாக அமைத்துக் கொண்டு திருத்தணிகை சென்று அங்குள்ள தலைவனாம் முருகனிடம் வள்ளியைப் பற்றிக் கூறுகிறார். முருகனும் வள்ளி தினைப்புனம் காக்கும் மலைப் பிரதேசத்திற்கே வருகிறான். காலிலே கழலும், இடையிலே கச்சும், தோளிலே வில்லும் ஏந்தி கரிய மேனியும் நெடிய வடிவும் தாங்கி வேட்டுவர் கோலத்திலேயே வருகிறான். தினைப்புனங்காத்து நிற்கும் வள்ளியை காண்கின்றான்.

ஒத்த குலமும் ஒத்த நலனும் உடைய தலைமகனும் தலைமகளும், அடுப்பாரும் கொடுப்பாரும் இன்றி ஊழ்வினை வசத்தில் ஒருவரை ஒருவர் கண்டு தமிழர் மரபிற்கேற்ப இருவரும் காதல் கொள்கின்றனர். அங்கே ஒரு சிறு காதல் நாடகமே நடக்கிறது. 'நான் துரத்தி வந்த மான் இங்கு வந்ததுண்டோ ?' என்று கேட்டுக் கொண்டே வள்ளியின் பக்கலில் வருகிறான் வேட்டுவ முருகன். அவளும் துரத்தி வந்த மானுக்கு அடையாளங்கள் கேட்டு நிற்கிறாள்.

நமக்குத் தெரியும் ஏனல் காவல் இவளும் அல்லள், மான் வழிவருபவன் இவனும் அல்லன் என்று. இந்த நிலையில், தன் மகளைக் காணப் பரிவாரங்களுடன் வருகிறான் நம்பிராஜன். எதிர்பாரா வகையில் இந்த இடையீடு ஏற்பட்டதன் காரணமாக, வேட்டுவனாக வந்த முருகன் வேங்கை மரமாக மாறி அங்கு நிற்கிறான். புதிதாகத் தோன்றிய வேங்கையே உனக்கு இனிய

வே.மு.கு.வ-5