பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

வேங்கடம் முதல் குமரி வரை

சமயத்தில் ஒரு அன்பர், வள்ளியை வேலன் மணந்த தலம், கன்னியாகுமரிப் பக்கம் அல்லவா இருக்கிறது என்றார். அங்கும் சென்றேன்.

குமரி மாவட்டத்தில் தக்கலைக்கு வடமேற்கே இரண்டு மைல் தொலைவிலுள்ள குமார கோயிலில் வள்ளியும் முருகனும் தனித்துக் கம்பீரமாகச் சிலை உருவில் நின்று கொண்டிருக்கிறார்கள். ஆம், திருமண கோலத்தில்தான் இருக்கிறார்கள். தெய்வயானைக்கு அங்கு இடமில்லைதான். என்றாலும் அங்கும் வேட்டுவ வடிவில் குமரனைக் காண முடியவில்லை. இப்படியெல்லாம் அலமந்து நிற்கும் போதிலே, சென்ற வருஷம் நாமக்கல்லுக்குச் சென்றிருந்தேன்.

அங்குள்ள அன்பர்கள் கொல்லிமலையிலே வேலுக் குரிச்சி என்ற ஊரிலே உள்ள கோயிலிலே உள்ள முருகன் வேட்டுவக் கோலத்தினன் என்றார்கள், நாமக்கல்லிலிருந்து பதினைந்து மைல் தொலைவில் உள்ள அந்த வேலுக்குரிச்சிக்கே சென்றேன். அங்கே கொல்லிமலைச் சாரலிலே உள்ள ஒரு குன்றிலே ஒரு சிறு கோயில். ஏற வேண்டியதெல்லாம் ஐம்பது படிகளே. அக்கோயிலைச் சுற்றி ஒரு சிறுமதில். அம்மதிலின் கீழ்புறம் ஒரு வாயில். அதன் வழி நுழைந்து, கோயிலின் தென்புறமுள்ள பாதாள வாயில் வழியே உள்ளே சென்றால் மேற்கே பார்த்த கருவறையில் வேலேந்தி நிற்கிறான் வேலன். அவன் சுமார் மூன்று அடி உயரமே உள்ளவன். என்றாலும் நிற்பதிலே ஒரு மிடுக்கு. தலையிலே வேட்டுவக் கொண்டை, காலிலே வேடுவர் அணியும் பாதரட்சை, வலக்கையிலே ஒரு வேல், தொடையில் வைத்திருக்கும் இடக்கையிலே ஒரு கோழி சரி, சரியான வேட்டுவ வடிவிலே உள்ள முருகன் இவன் தான் என்று தீர்மானித்தேன்.