பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9. தமிழ் நாட்டின் அஜந்தா

ரு நாள் காலை நேரம். நானும் சில நண்பர்களும் கன்னியா குமரியிலிருந்து திருவனந்தபுரத்துக்குப் பயணம் புறப்பட்டோம், நாற்பது ஐம்பது மைல் மேடு பள்ளங்களின் வழியாக. எல்லாம் நல்ல 'சிமண்ட்' சாலை போடப்பட்டிருக்கிறது. அந்தச் சாலையில் காரில் போவதே ஒரு இன்பம். போகிற வழியெல்லாம் தோப்புகள், வயல்கள், ஆறுகள், சிற்றோடைகள், தாமரைத் தடாகங்கள்தான். கண் நிறைந்த காட்சிகளே எங்கும். நெய்யாற்றங்கரைக்குக் கீழ்புறம் (ஆம்; நெய் யாற்றங்கரையில் தண்ணீர்தான் ஓடுகிறது. நெய் ஆறாக ஓடுகிறது என்று நினைத்து அங்கு போய் ஏமாந்து விடாதீர்கள்.) ஒரு பெரிய தடாகம். தெளிந்த தண்ணீர் அதில் நிறைந்திருக்கிறது. பக்கத்திலே சேறு பட்ட வயல்கள். தடாகத்திலும், இந்த வயல்களிலும் செவ்வாம்பல் பூக்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கின்றன. காதலன் வரவை நோக்கும் காதலியைப் போல் உதய சூரியன், ஆகாய வீதியிலே வர வர மெள்ள மெள்ள இதழ் விரித்துச் சிரிக்க ஆரம்பிக்கின்றன மலர்கள். இந்த மலர்களுக்கிடையிடையே அன்னப் பறவைகள் அங்கு மிங்கும் நீந்திக் கொண்டிருக்கின்றன.

அன்னப் பறவைகளின் குஞ்சுகளும் தாய்மாரோடு நீந்துகின்றன, கொஞ்ச நேரத்தில் தடாகம் முழுவதும் செக்கச் செவேலென்று தாமரைப் பூக்கள் மலர்ந்து விடுகின்றன. அந்தக் காட்சி தண்ணீரிலே தீப்பற்றிக் கொண்டது போலத் தோன்றுகிறது. தாய்ப் பறவைகள், "ஏது, நம் குஞ்சுகள் இந்தத்தீயின் வெம்மையில்