பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

வேங்கடம் முதல் குமரி வரை

வெம்பிப்போய்விடக் கூடாதே“ என்று அஞ்சி தத்தம் குஞ்சுகளைத் தங்களுடைய சிறகுகளால் அனைத்து ஒடுக்கிக் கொள்கின்றன. இப்படியெல்லாம் ஒரு காட்சியை நாம் இன்று பார்க்கிறோம். இதே காட்சியை இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பும் ஒரு கவிஞர் பார்த்திருக்கிறார். பார்த்தவர், அந்தக் காட்சியை

“அள்ளல்ப் பழனத்து
அரக் கரம்பல் வாய் அவிழ
வெள்ளம் தீப்பட்டது
என வெரீஇப் - புள்ளினம் தம்
கைச் சிறகால் பார்ப் பொடுக்கும்.”

(முத்தொள்ளாயிரம்)

என்று ஒரு நல்ல பாட்டிலே அமைத்தும் வைத்திருக்கிறார். ஓர் அற்புத சித்திரத்தை அழகிய சொல்லிலே தீட்டி வைத்திருக்கிறார் என்றும் சொல்லலாம்.

இதைவிட அழகான ஓர் ஓவியத்தைக் கல்லிலே தீட்டி வைத்திருக்கிறான் ஒரு சக்கரவர்த்தி. இன்றைக்கு ஆயிரத்து முந்நூறு வருஷங்களுக்கு முன்னாலே தீட்டப்பட்ட அந்தச் சித்திரத்தில் நல்ல அழகான தாமரைத் தடாகம் ஒன்று உண்டு. தடாகம் முழுவதும் மலர் மயந்தான். அன்னப் பறவைகளும் குஞ்சுகளும் வெள்ளம் தீப்பட்டது என அஞ்சி நிற்கும் காட்சியெல்லாம் மிக மிக அழகு. தடாகத்தில் அன்னப்பறவைகள் மட்டுமல்ல, யானைகளும் மாடுகளும் வேறே இறங்கிக் குழப்புகின்றன. தாமரைத் தடாகம் என்றால் பறவைகளுக்கும் விலங்கினங்களுக்கும்தானா? மக்களுக்கு இல்லையா? ஆகையால் புதுப் புனல் குடையும் ஆடவர் சிலரையும் அங்கே காண்கிறோம்.

பெண்டிரும் இருந்திருக்க வேண்டும் என்று கொஞ்சம் கற்பனையும் செய்து கொள்ளலாம். இப்படிப்பட்ட ஒரு