பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

வேங்கடம் முதல் குமரி வரை

மலையிலே குடையப்பட்டிருக்கிறது. தாழ்வாரத்துப் பக்கச் சுவர்களில் இரண்டு சிலைகள். வடக்கே பார்த்து இருப்பவர் பார்ஸவ நாதர். அவரை ஜைன தீர்த்தாங்கரர் இருபத்தி நாலு பேர்களில் ஒருவர் என்கிறார்கள். அவருடைய தலைமீது படமெடுத்த நாகம் விரிந்து குடை பிடிக்கிறது. தென்புறம் பார்க்க இருப்பவர் ஜைன குரு ஆச்சார்யார். இவருக்குச் சாதாரண குடையேதான். இருவரும் அர்த்த பத்மாசனத்தில் தியானத்தில் இருக்கிறார்கள். இந்தச் சிலைகள் கல்லில் செதுக்கிய சிலைகள். மேலே வர்ணம் பூசப்பட்டுப் பின்னால் உதிர்ந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

மேல் விதானத்தையும், பக்கச் சுவர்களையும் விட்டுக் கொஞ்சம் அந்த மண்டபத்தைத் தாங்கி நிற்பது போல் செதுக்கப்பட்டுள்ள தூண்களைப் பார்த்தால் உலகமே கண்டு அதிசயிக்கத் தகுந்த இரண்டு அழகிய சித்திரங்களைப் பார்ப்போம். வடபுறத்தில் ஒரு நடன மாதைப் பார்க்கிறோம். அவளுடைய அங்கங்களில் ஒரு குழைவு. கண்களிலே ஒரு கவர்ச்சி. அணிகளிலே ஒரு வியப்பு. அவளது ரோஜா வர்ண உடல் அழகும், கருங் கூந்தலிலே தாமரை சொருகியிருக்கும் நேர்த்தியும் நம்மை மயக்கவே செய்யும். அவளது தோற்றத்திலும், நடனத்திலும் நாம் உள்ளத்தைப் பறிகொடுத்து விடாமல் கொஞ்சம் கண்களைத் திருப்பி அடுத்த தூணைப் பார்த்தால் அங்கே காட்சி கொடுக்க மகேந்திர வர்மனே காத்து நிற்கிறான்.

மகேந்திர வர்மன் பெரிய வீரன், நல்ல கவிஞன், சங்கீர்ண ஜதியின் ஆதி கர்த்தா, மத்த விலாச நாடகாசிரியன், பெரிய சித்திரக்காரப் புலி என்றெல்லாம் கேள்விப் பட்டிருக்கிறோம்.

மற்ற விஷயங்கள் எல்லாம் உண்மையோ என்னவோ தெரியாது. ஆனால் அவன் ஒரு பெரிய சித்திரக்காரப் புலி