பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

வேங்கடம் முதல் குமரி வரை

பெருமாள்களை எல்லாம் வணங்கி மாலையில் ஆழ்வார் திருநகரி வந்து ஆதிநாதரும் ஆழ்வாரும் பரமபதத்துக்கு எழுத்தருளும் போது தாமும் உடன் சேர்ந்து கொண்டால் இந்த பிறவியிலேயே முத்தி நிச்சயம் என்று நம்பிக்கை யோடு யாத்திரைக்கு வருபவர்களும் உண்டு.

நமக்கெல்லாம் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று இதற்கு வசதி பண்ணிக் கொள்ள அவகாசம் கிடைக்கிறதோ என்னவோ? நல்ல தீபாவளி தினத்தன்று - ஆம் எல்லோருக்கும் விடுமுறை கிடைத்திருக்கும் நாளில் - காலையில் கங்கா ஸ்நானம் செய்து புத்தாடை புனைந்து இந்த நவ திருப்பதிகளையும் ஒரு சுற்றுச்சுற்றி தரிசித்து விடலாமே. அதற்கு நமக்கு அவகாசமும் கிடைக்குமே. அதற்கும் அவகாசமில்லாத தமிழ் அன்பர்களை இன்று மானசீகமாகவே இந்த நவதிருப்பதிகளுக்கும் அழைத்துச் சென்று விட முனைகிறேன் நான் இன்று. என்ன, உடன் வருகிறீர்கள் அல்லவா? இல்லை நேராகவே சென்று பார்த்து விடுவோமே என்று துணிகிறவர்களுக்கு ஒன்று சொல்வேன்.

திருநெல்வேலியிலோ இல்லை ஸ்ரீவைகுண்டத்திலோ ஒரு டாக்சி கார் ஏற்பாடு செய்து கொண்டு புறப்படுவது நல்லது. நடந்தே கிளம்புவோம் என்றால் ஒரு எச்சரிக்கை. மொத்தம் பதினாறு, பதினெட்டு மைல் நடக்கத் தயாராக இருக்க வேண்டும். இந்த நடராஜா சர்வீசை விட்டு காரிலே சென்றால் சுமார் மூன்று நான்கு மணி நேரத்திற்குள் முடித்துத் திரும்பி விடலாம். இந்த நவதிருப்பதிகளில் ஆறு திருப்பதிகள் தாமிரபருணியின் வடகரையிலும் மூன்று திருப்பதிகள் தென்கரையிலும் இருக்கின்றன என்றாலும், ஆற்றின் வடகரையில் நடந்தாலும் சரி, காரில் சென்றாலும் சரி, நான்கு திருப்பதிகளையே வசதியாகக் காண முடியும்.