பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

வேங்கடம் முதல் குமரி வரை

சிவபெருமானுக்கு இச்சூரிய பூசை பல தலங்களில் நடக்கிறது என்றாலும், பரந்தாமனுக்கு இந்த சூரிய பூசனை நடப்பது இந்தத் திருப்பதி ஒன்றிலேதான். இக் கோயிலின் கன்னி மூலையில் வைகுண்ட நாயகி தனிக் கோயிலில் கோவில் கொண்டிருக்கிறாள். அதற்கு எதிர்த்த வட திசையில் சோரநாத நாயகிக்கும் ஒரு தனிக்கோயில் இருக்கிறது. இக் கோயிலில் காண வேண்டியவை செப்புப் படிமமாக இருக்கும் லக்ஷ்மி நரசிம்மர் ஒருவர். வெளி மண்டபத்திலே இரண்டு அழகிய சிற்பங்கள். ராமன் சுக்ரீவனை அணைத்துக் கொண்டு நிற்கும் கோலம் ஒன்று. அதற்கு எதிர்திசையில், லக்ஷ்மணர் அனுமனையும் அங்கதனையும் அணைத்து நிற்கும் கோலம் ஒன்று. இரண்டுமே தமிழ்நாட்டின் சிற்பக்கலை உலகில் பிரசித்தி பெற்றவை.

வைகுண்ட நாதன் சந்நிதியிலேயே நீண்டநேரம் நின்றுவிட்டோம். இனி விறு விறு என்று மூன்று மைல் நடந்தால் நத்தம் என்ற ஊர் வந்து சேருவோம். நத்தம் என்னும் நவதிருப்பதி ஒன்று கிடையாதே என்று எண்ணினால், அந்த ஊர்தான் வரகுணமங்கை என்ற திருப்பதி என்று அறிவோம்.

அங்கு கோயில் கொண்டிருப்பவர் விஜயாசனர். பெயருக்கு ஏற்ப இருந்த திருக்கோலத்திலேயே காட்சி அளிப்பார். அவர் பக்கத்தில் வரகுண வல்லித்தாயாரும் வீற்றிருப்பார். அவர்களையும் வணங்கிவிட்டு மேல் நடந்தால் புளிங்குடி என்ற திருப்பதி வந்து சேருவோம். இங்கே புஜங்க சயனராக பெருமாள் கிடக்கிறார். நல்ல ஆகிருதியான வடிவினர். அர்த்த மண்டபத்தையும் கடந்து கருவறைவாயில் வரை சென்றால்தான் அவரது முழு வடிவையும் காணலாம்.