பக்கம்:வேட்டை நாய்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேட்டை நாய்

21



அப்பொழுது அரசருக்கோ அல்லது அந்தப் பிரபுவுக்கோ ஸெதாங்தாவைப் பற்றிய நினைவே இல்லை. விருந்தினரை உபசரிக்கும் வேலையில் பிரபு அவனை மறந்துவிட்டார். அரசரும் வந்திருந்த சில பிரபுக்களுடன் வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்ததால், அவனைப் பற்றியே நினைக்கவில்லை.

“ஒ! தாராளமாக ஆரம்பிக்கலாம்” என்றார், அரசர்.

‘சரி, கதவுகளை யெல்லாம் தாழிடும்படி சொல்லி விட்டேன். எதிரிகள் எவரும் வராமல் வெளியில் காவலும் வைத்துவிட்டேன்.’

“யார், உம்முடைய ஆட்களே காவல் இருக்கிறார்களா? அல்லது அரண்மனை ஆட்களா?”

“ஆட்கள் எதற்கு? என்னுடைய வேட்டை நாய்தான் காவலாக இருக்கிறது! அது மிகவும் பொல்லாத நாய். அதைக் கண்டாலே எதிரிகளுக்குப் பயம்தான்! ஒரு தடவை முப்பது நாற்பது பேர் இங்கே கொள்ளையடிக்க வந்தார்கள். அவர்களையெல்லாம் மூலைக்கு ஒருவராக ஓடும்படி அது விரட்டியது இருக்கிறதே. அடேயப்பா: அதைப் பற்றிச் சாவதானமாகச் சொல்ல வேண்டும்” என்றார் பிரபு.

பிறகு, விருந்து ஆரம்பமானது. எல்லோரும் தட்டுகளைக் காலி செய்யும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டனர்.

* * *

ஸெதாந்தா ஆட்டத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டான். புறப்படும்போதே மணி ஆறாகி விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/23&oldid=500577" இலிருந்து மீள்விக்கப்பட்டது