பக்கம்:வேட்டை நாய்.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேட்டை நாய்

25


பிரபுவைப் பார்த்து, “ஐயா, நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். இதே ஜாதியில் ஒரு நாய்க் குட்டியை வாங்கி நாம் வளர்ப்போம். அது நன்றாக வளர்ந்து, உங்கள் குடும்பத்தையும், உங்கள் சொத்து சுகங்களையும் நன்றாகக் காவல் காக்கும் வரை உங்களுக்கு வேறு வேட்டை நாயே தேவையில்லை. இதோ இறந்து கிடக்கும் வேட்டை நாய்க்குப் பதில், நானே உங்கள் விட்டில் வேட்டை நாய்போல் இருந்து, காவல் காத்துவரப் போகிறேன். ஆம், தீர்மானித்து விட்டேன். இது நிச்சயம். இது சத்தியம், இனி உங்கள் வேட்டை நாய் நான்தான்; நானேதான்!” என்று வீரமாகக் கூறினான்.

அவன் வார்த்தையைக் கேட்டு அரசர் திகைத்தார்; பிரபு மலைத்தார்; கூடியிருந்தவர்கள் வியந்தனர்.

‘வேட்டை நாயாக இருப்பேன்’ என்று சொன்னதோடு ஸெதாந்தா நின்று விடவில்லை. அன்று முதல் பல வருஷங்கள் வேட்டை நாய் போலவே இருந்து, அந்தப் பிரபுவின் வீட்டைக் காத்துவந்தான். எல்லோரும் அன்று முதல் அவனை ‘சுலைன்’ என்று அழைக்க ஆரம்பித்தனர். சுலைன் என்றால் அந்த நாட்டில் ‘வேட்டை நாய்’ என்று பொருள்.

ஸெதாந்தா பெரியவனான பிறகு, சாதாரண ஒரு மனிதனாக அவன் இருக்கவில்லை. ஒரு பெரிய போர் வீரனாகவே விளங்கினான்; போர் வீரனாகவே வாழ்ந்தான்; போர் வீரனாகவே இறந்தான். ‘ஸெதாந்தா’ என்ற பெயர் அயர்லாந்தில் அநேகமாக எல்லோருக்குமே தெரிந்தபெயராகிவிட்டது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/27&oldid=500583" இலிருந்து மீள்விக்கப்பட்டது