பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/293

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

291

அறிவற்றவர் என்று கீழ்மையாக நாம் நினைத்து விடவில்லை ஆனாலும் வடவாரியர்களை நம்பிய எவனும் இத்தமிழினத்தில் தலையெடுத்ததும் இல்லை; தலை தப்பியதும் இல்லை. மிக மிகத் தூய்மையான அரசியல் காரர்களான வ.உ.சி., திரு.வி.க. போன்றவர்களும் கூட இந்நிலையைத் தங்கள் இறுதிக் காலத்தில் உண்ர்ந்து நெஞ்சு நோகவே செய்தார்கள் என்றால் இப்பொழுதுள்ளவர்கள் எம்மாத்திரம்?

அடுத்து வரும் தேர்தலில் இந்திராப் பேராயம் ஆயிரங்கோடி உருபா முதலீடு (செலவு செய்ய விருக்கிறதாக அனைவரும் கூறி வருகின்றனர். சில காலத்திற்கு முன் அரசியலோடு அறவியல் கைகோத்திருந்தது. ஆனால், இக்கால் உலக முழுவதும், அறிவியலும் கைபிணைந்து மக்களை ஆட்டக் களமாக்கி வருகின்றன. இனி அறம் செல்லாது; பேச்சு எடுபடாது; கருத்துகள் வெல்ல முடியாது நேர்மை, நயன்மை, உண்மை எதுவுமே முன்வர இயலாது. போலித்தனமும், பொய்ம்மையும் ஆரவாரமும், அடாவடித் தனமும், அரம்பச் செயல்களும், பணமும், படையுமே வெற்றி பெற நன்றாக எண்ணிப் பாருங்கள்!

இந்நிலையில் தமிழீழத்தில் தமிழின மக்கள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்திலும் ஆளுநர் ஆட்சியினால் அவர்கள் பாடு வெகு திண்டாட்டமாக இருந்து வருகிறது. அனைத்து நிலையிலும் இங்குள்ள தமிழ் மக்கள் அரசியல், பொருளியல், குமுகவியல், கலை, பண்பாட்டு உரிமைகளை இழந்து, ஏற்கனவே அடிமைப்பட்டுக் கிடப்பதுடன், இன்றும் பேரவலத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எதிர்காலம் இவர்களின் நிலையில் எப்படியிருக்குமோ என்று உய்த்துணர இயலாது.

இங்குள்ள கட்சித் தலைவர்கள் அனைவரும் இந்த அழிவு நிலைகளை முற்றும் உணர்ந்திருக்கிறார்கள் எனினும், தங்களுக்குள் அனைத்து நிலைகளிலும் வேறுபட்டும், மாறுபட்டும் ஒருவரை ஒருவர் அமுக்கிக் கொண்டும் அழித்துக் கொண்டுமே கிடக்கின்றனர். ஆனால் அனைவரும் வடிவாரிய வணிகக் கூட்டு அரசியலின் கீழ்மைத் தனங்களையும், வஞ்சகங்களையும், தமிழின அழிப்பையும் உணர்ந்தே உள்ளனர். எனினும் அவர்கள் ஒன்றுபட்டு, அவர்களை எதிர்க்கும் ஆற்றலை இழந்தே உள்ளனர் இவ்வழங்கல் நிலையில் அவர்களுக்கு நாம் மிகவும் வருத்தத்துடனும் அன்புடனும், வேண்டுதலாகம் கூறுவது இதுதான்.