பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

33

அரசியல், பொருளியல் அறிஞர்களுக்கே விளங்காத ஒரு புதிர். இவற்றிற்கெல்லாம் ஓர் அடிப்படைக் காரணம் உண்டு. அது தான் இந்நாட்டின் அரசியல் பொருளியல் அமைப்புச் சட்டம். இந்தச் சட்டத்தையே வங்காள விரிகுடாவிலோ, குமரிமாக் கடலிலோ கொண்டுபோய் வீசியெறிந்து விட்டு, புத்தம் புதிய சட்டங்களைப் புத்தம் புதிய மூளைகளைக் கொண்டு செய்வித்தால் ஒழிய, இந்தியாவின் அரசியல் நாற்றத்தைப் பனிமலையளவு சவர்க்காரம் கொண்டு, பசிபிக் மாக்கடல் அளவு தண்ணீர் விட்டுக் கழுவினாலும் தீர்த்துவிட முடியாது. ஏனென்றால் இந்தச் சட்டத்தை அமைத்தவர்கள் அறுவர். அதில் நால்வர் பார்ப்பனர்; ஒருவர் தாழ்த்தப்பட்டவர் ஒருவர் முசுலிம், அறுவரில் நால்வரால் ஒப்புக் கொள்ளப் பெற்ற சட்ட அமைப்புகளே இவ்விந்திய வரலாற்றையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றன. ஏனென்றால் அவர்களால் ஒப்புக் கொள்ளப்பெற்ற சட்ட அமைப்புகளின் இன்றியமையாத தந்திரச் சொற்களெல்லாம் பழங்கதைப் புளுகர்களான மநு, சாணக்கியர் முதலியோர் எழுதிய குலவேறுபாட்டுக் கொள்கை என்ற குட்டையில் ஊறிக் கிடந்த மட்டைகளே! எனவேதான் “இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உள்ளவரை, இங்குக் குமுகாய உரிமைக்கு வழியில்லை; வழங்கப்பட்ட உரிமைகளும் குல, சமய அடிப்படையில் தான் வழங்கப்பட்டுள்ளன; இவை இருக்கும் வரை இங்குள்ள மக்களுக்குள் உள்ள ஏற்றத் தாழ்வுகளும், அரசியல் போராட்டங்களும் இருந்தபடியேதான் இருக்கும். நாமும் அவறிற்காகப் போராடிப் போராடி இறந்தபடியே தான் இருப்போம். இவ்விரண்டு நிலைகளுக்கும் உட்பட்டு நாம் செத்துக் கொண்டிருக்கும் இப் போராட்டமே நமக்கு வாழ்க்கையாக இருக்கும்” என்று சொல்கின்றோம். எண்ணிப் பார்ப்பவர்களுக்கு நாம் கூறுகின்ற இக்கருத்து எத்துணையளவு உண்மையானது என்று புரியாமல் போகாது. தெளிவாக விளங்கும். விளங்கிக் கொள்ளாதது அவர்களின் பின் தங்கிய நிலையைப் பொறுத்தது ஆகும்.

மேற்கண்ட வகையில் பெருத்த சிக்கலுக்குட்பட்டதான இந்திய அரசியல் அமைப்பில் நம் தாய் நிலமாகிய தமிழகம் ஆட்பட்டுத் தவிப்பது நம் போன்ற நெஞ்சினார்க்கு எத்துணைக் கவலை தருவதாக உள்ளது! இப்பொழுதுள்ள சூழ்நிலையில். இந்தியா ஒன்றாக இருக்கும் வரை பேராயக்கட்சிதான் பெரும்பான்மைக் கட்சியாக விளங்கும். அது பெரும்பான்மை பெறுகிறவரை வடநாட்டினர்தாம் இந்திய அரசியலை ஆட்டிப் படைத்துக்