பக்கம்:வேமனர்.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



6. கவிஞர் பேசினார்

உடனடியாகத் தோன்றிய எண்ணத்தையே
கவிஞர் பேசினார்

'-எமர்சன்

தெலுங்கு இலக்கியத்தின் தலைவர்கள் இப்போது வேமனரை ஒரு கவிஞராக, ஆனால் ஒரு சில்லறைக் கவிஞராக ஒப்புக் கொள்ளுகின்றனர். அவர்கள் கருத்துப்படி அவர் மிகவும் குறிப்பிடத்தக்க சதகக் கவிஞர்களுள் மிகச் சிறந்தவராவார். வேமனரின் பாடல்கள் சதக-மாதிரிக் கவிதைகளை ஒத்துள்ளன என்பது உண்மையே; அவை பொதுவான பல்லவியைக் கொண்டுள்ளன; சில அரிய சந்தர்ப்பங்களில் அது மாறுங்கால், அந்த மாற்றமும் சிறிய அளவில்தான் உள்ளது. ஆனால் அவருடைய கவிதையின் வடிவத்தை விட்டுவிட்டு அதன் உயிரோட்டம் மட்டிலும் கருதப்பெறுமேயாயின் சுண்ணக்காம்பினின்றும் பாலாடைக் கட்டி வேறுபடுகின்றதைப்போலச் சதகக் கவிஞர்களினின்றும், இவர் வேறுபட்டவராகின்றார். நூற்றுக்கணக்கான சதகக் கவிஞர்கள் இருக்கவே செய்கின்றனர்; பெரும்பாலும் அவர்கள் யாவரும் புகழ்பாடும் கவிஞர்களேயாவர்; அவர்கள் யாவரும் தம் தனிப்பற்றுக்குரிய தெய்வத்தையோ அல்லது செல்வச்சிறப்புடைய தம் புரவலர்களையோ பாடுவர். அவர்கள் அடிக்கடி செய்வதுபோல ஒழுக்கத்துறையில் தம் கருத்தினைச் செலுத்துங்கால், அவர்தம் நீதி மொழிகள் பள்ளிச்சிறுவர்கள் பார்த்தெழுதும் குறிப்பேட்டு முதுமொழியின் சப்பிட்ட தரத்திற்கு மேல் உயர்வதில்லை. அவர்தம் மனங்கள் ஆழமற்றும் வறண்டும் கிடக்கின்றன; அவர்தம் நடையோ கால் நடைதான்; அவர்தம் கவிதையோ கல்விச்செருக்குடையது. வேமனரோ இதற்கு முற்றிலும் மாறாக, உள்ளுணர்வுகளில் சுயமாகவும், இயற்கையை உற்றுநோக்கலில் அறிவுக்கூர்மையாகவும், மனவெழுச்சித் துலக்கத்தில் விரைவாகவும் உண்மையாகவும், சிந்தனையில் நுண்ணறிவு கொண்டும், எடுத்தியம்புவதில் துணிவாகவும் இருக்கின்றர். 'தெலுங்கு இலக்கியம்' என்ற தமது நூலில் சதகக் கவிஞர் என்றும் 'சதக எழுத்தாளர்களுள் மன்னர்’ என்றும் பி. செஞ்சையாவும் ராஜா எம். புஜங்கராவும் கூறுவது மிகக் குறைவான மதிப்பீடாகும். டாக்டர் சி. ஆர். ரெட்டி இந்த நூலின் நூன்முகத்தில் "நம் வான மண்டலத்தின் முதன்மையான விண்

54

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/61&oldid=1219685" இலிருந்து மீள்விக்கப்பட்டது