பக்கம்:வேமனர்.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடைந்தது" என்று கூறுவார். அங்ஙணமே வேமனரின் கையில் 'ஆட்டவெலதி' அச்சிறப்பினை அடைந்தது. வேமனருக்கு முன்னர் எந்த ஒரு தெலுங்குக் கவிஞராலும் அதன் இயல்பான எளிமையையும் அணியின்மையையும் அதன் சந்தத்தையும் இடையொழுக்கினையும் முழுமையாக உணரவோ அல்லது முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவோ இயலவில்லை.

வேமனரின் பாடல்களைச் சேகரித்து வெளியிட்ட பதிப்புகளில் ஆட்டவெலதியைத் தவிர வேறு யாப்புகளிலும் புனையப் பெற்ற பாடல்களைக் காண்கிறோம். ஆனால் அவை அவருடைய முதன்மையான பகுதியுடன் எந்த அளவிலாவது அருகில் வரமுடியவில்லை. அவை அவருடைய மாதிரியாக அமைந்த எளிமையிலும் நேர்மையிலும், குத்திக்காட்டும் பண்பிலும் குறைபடுகின்றன. இத்தகைய எல்லாப் பாடல்களுமே போலியானவை என்று கருதப் பெறல் வேண்டும் என்று இரால்லபள்ளியர் குறிப்பாகக் கூறுகின்றார்; அவர் கூறுவது சரியேயாகும்.

வேமனர் தன்னுடைய ஆட்டவெலதிப் பாடலைக் கை நேர்த்தியுடன் கையாளும் முறை டாக்டர் ஜி. பி. கிருஷ்ணராவ் என்பாரால் திறமையுடன் இங்ஙனம் சுருக்கமாகக் கூறப்பெறு கின்றது:

பொதுவாகக் கூறுமிடத்து, அவர் (வேமனர்) தன் ஆட்டவெலதியின் முதல் இரண்டு வரிகளைத்தான் உணர்த்தவேண்டும் எனக் கருதும் கருத்தினைக் கூறுவதற்காக ஒதுக்கி வைக்கின்றார்; அதனைப் படிப்போர் மனதில் ஆழப்பதித்தற்கு ஒளிதுலங்கும் ஒப்புமையை மூன்றாவது வரியில் தருகின்றார். நான்காவது வரி ஒர் அணிகலன்போல்-மகுடம்போல்-அமைகின்றது. இங்ஙணம் பாகுபாடு செய்து ஆராயுங்கால் பாடலின் முழு அழகும் மூன்றாவது வரியில் தாம் பெற்றுள்ள ஒரே ஒரு ஒப்புமையில் எடுத்துக்காட்டில் அமைகின்றது என்பது தெளிவாகும். அவர் நன்கு எறியும் எறிபடை சிலசமயம் குறி தப்பினும் தப்பலாம்: ஆனால் அவரது ஒப்புமை தப்பவே தப்பாது. பேரளவில் அவருடைய கவிதைத் திறனும் பெருமையும் அதில்தான் சார்ந்துள்ளன. அவருடைய கையில் அது புதுமையையும் செழிப்பையும் பெற்றுள்ளது; அடிக்கடி அது பொருள்செறி தொடர்வடிவத்தை எய்திப் படிப்போரை வியப்பில் ஆழ்த்துகின்றது. காளிதாசரை ஓர் உவமைக்கவிஞர் என்றால், வேமனரை ஓர் ஒப்புமைக் கவிஞர் என்று சொல்லலாம்.

வேமனர் தமது ஒவ்வொரு பாடலிலும் ஒப்புமையைக் கையாளவில்லை என்றபோதிலும் பெரும்பாலானவற்றில் அதனைக்

58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/65&oldid=1250794" இலிருந்து மீள்விக்கப்பட்டது