பக்கம்:வேமனர்.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அதிகப்பயன்தரத்தக்கதென்று ஒருவரும் சொல்ல முடியாது; ஆனால் மயிர்வினைஞரால் தெளிக்கப்பெற்ற நீர் அதிகப்பயன் விளைவித்தது என்பதற்கு நன்முறையில் சிரைக்கப்பெற்ற உங்கள் தலையே தெளிவான சான்றாக அமைகின்றது. அடுத்து, புராணத் தொகுதிகளின்பால் தன் கவனத்தைச் செலுத்திய வேமனர் கூறுகின்றார்: திருமால் திருப்பாற்கடலின்மீது படுத்து இளைப்பாறுகின்றார் என்பதை நீங்கள் நம்புகின்றீர்கள். அப்படியிருக்கும்போது அவர் கண்ணனாக இருந்தபோது ஆயர் மனைகளில் பாலை ஏன் களவாடினார்? களவாடிய பால் அதிகமாகச் சுவைக்கின்றது என்பதற்காகவா அவர் அங்கனம் செய்தது? அஃது ஒரு சூழ்ச்சிச்செயல் என்று ஐயுராமல், இராமர் தன் இளம் துணைவியைத் தனியேவிட்டுப் பொன் மானைத் தொடர்ந்து சென்றார். அப்படியானல், சிந்தனையற்றவர் எங்கனம் கடவுளாக இருக்கமுடியும்? நீங்கள் நம்புவதுபோல் நெருப்புக்கணையொன்றினைச் செலுத்தி இராமர் கடல்நீரை வற்றச் செய்யவில்லையா? அப்போது அவர் ஏன் கடலைக் கடக்கவில்லை? வழி தெளிவாக இருக்கும்போது பாலத்தை ஏன் கட்டினர்? நான்முகன் ஒருவருக்குச் செல்வத்தையும் பிரிதொருவருக்கு ஈகைப் பண்பையும் தருகின்றார். வேண்டுமென்றே தவறாகச் செய்யும் பண்பு ஒரு கடவுளிடம் இருப்பது என்னே!

டாக்டர் ரெட்டி அவர்கள் கூறுவதுபோல், "வேமனரின் நடை இங்ஙணம் கசப்பும் காரசாரமுமான ஏளனத்திலிருந்து மென்மையான ஏளனம் வரையிலும், பணிவிணக்கமுடைய வஞ்சப் புகழ்ச்சி வரையிலும், இனிய நகைச்சுவை வரையிலும் பரவிச் செல்லுகின்றது. அவர் எடுத்துக்கூறும் பொருள்களும் அங்கனமே விரிந்து செல்லுகின்றன. மனிதத் தொடர்பும் மனித நலமும் இல்லாத எதுவும் அவருக்குப் பயனற்றதாகவே அமைந்தது. கதேயைக் குறித்து மாத்யூ ஆர்னேல்டு சொன்னார்:

அவரொருநன் மனிதர்;எல்லாச் செயல்களிலும் என்றும்
அனைவருக்கும் தனிப்பரிவு காட்டுகின்ற பண்பர்;
அவரைப்போல் மாண்புடைய பிறமனிதர் தம்மை
அகிலத்தில் எவ்விடத்தும் யான்கண்ட தில்லை.
 
இடரின்கண் வீழ்ந்துகிடக் கும்மனித இனத்தை
எடுத்துக்கொண் டங்கங்கே இளைத்தகுறை பாட்டைப்
படரளிக்கும் பெரும்புண்ணைத் தெளிவாகக் கண்டார்
பரிவுடனே தன்விரலை அங்கங்கே சுட்டி.

"மக்களே நீவிர் வருந்தி நாளும்
மிக்க துன்பம் மேவி வாடுதல்
இங்குதான் இங்குதான் இங்குதான் என்பார்.”

62

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/69&oldid=1250800" இலிருந்து மீள்விக்கப்பட்டது