பக்கம்:வேமனர்.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்பிக்கை கொண்டிருக்கலாம். ஆனால் அந்தப் பொய்த் தோற்றக் கொள்கையைக் கைவிடாதிருந்தால், எந்த வடிவத்திலிருந்தாலும் அறியாமையையும் மூடநம்பிக்கையையும் கண்டிக்கும் ஒரு பேராசானாக அவர் திகழ்ந்திருக்கமுடியாது. ஆகவே, நாம் இரசவாதத்தைப்பற்றிய வாய்பாடுகளைக் கொண்டுள்ளவைபோல் தோன்றும் பாடல்கள் யாவும் செருகு கவிகள் என்றே ஊகிக்க வேண்டும். உண்மையாகவே அவை வேமனரது கவிதைகளாகவே இருப்பினும், தன் சீடர்களுள் அறிவற்றும் பேராசையும்கொண்டு இரசவாதத்தின் இரகசியங்களைக் கூறுமாறு தொந்தரவு செய்யும் ஒரு சிலரை ஏமாற்றுவதற்காகவே அவர் அவற்றை இயற்றி இருக்கலாம். எப்படியிருந்தபோதிலும், முட்டாள்தனமான அந்தப் பாடல்களையும் கூட கைவிட்டேயாகவேண்டும்.

இவையெல்லாம் செய்யப்பெற்ற பின்னரும்கூட, வேமனரின் கவிதைகளில் அதிக அளவு தங்கத்துடன் சிறிதளவு மாசும் மண்டியும் சேர்ந்திருத்தலையும் காணலாம், கவிஞர்களிலேயே மிகச்சிறந்தவர்களும்கூட இதனைத் தவிர்க்க முடியாது. அதிலும் சிறப்பாகத் தன்னுடைய உடனடியான சிந்தனையை முயற்சியின்றிப் பாடும் கவிஞராக இருப்பின், அவருடைய நூல் பண்படாத் தன்மையுடன் திகழத்தான் செய்யும். மேலும் நாம் ஏற்கனவே கூறியதுபோல, வேமனர் இலக்கியத்தைவிட வாழ்க்கையைப் பற்றியே கவலை கொண்டவராக இருந்தார். ஒரு கலைஞரைப் போலன்றி ஒரு வீரனைப் போலவே அவர் சொற்களைக் கையாளுகின்றார், வாதத்தில் விருப்பற்றிருக்கும் நிலையில், அவர் அறம் உரைக்கும் பண்பாளராகின்றார்; இந்நிலையும் அவருடைய கவிதைகளைப் பண்படாத தன்மையில் கொண்டு செலுத்தும். கவிஞர்களைப் பற்றியும் கவிதையைப் பற்றியும் அவர் குறிப்பிடுங்கால், ஒருவர் ஒப்பற்ற மதிப்புடன் திகழக்கூடிய ஒரே ஒரு கவிதையை எழுதினாலும் அவர் ஒரு சிறந்த கவிஞராகவே கொள்ளப்பெறுதல் வேண்டும் என்கின்றார். "ஒரு கூடை நிறைய இருக்கும் கண்ணாடிக் கற்களால் யாது பயன்? ஒரே ஒரு நீலமணி எல்லையில்லாத மதிப்புடன் இருக்கவில்லையா?” என்று கேட்கின்றார் அவர். ஆனால், வேமனர் இவ்வுலகிற்கு, ஒரு நீலமணியை மட்டும் அல்ல, நூற்றுக்கணக்கான விலை மதிப்பிட முடியாத நீலமணிகளை வழங்கிவிட்டார்.

65

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/72&oldid=1250804" இலிருந்து மீள்விக்கப்பட்டது