பக்கம்:வேமனர்.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொள்ளமுடியும். அன்றியும், மிகத் திறனுடைய கலைஞரும் ஒரு திருவுருவத்தை வரைவதுடன் நில்லாது அவருடைய ஆளுமையின் பல்வேறு முகப்புகளையும் அடக்கிக் காட்டக்கூடிய பலதொடர் திருவுருவங்களை வரைதல் வேண்டும். வேமனர் ஒருகணநேரத்தில் சாத்தமாகவும், அடுத்தகண நேரத்தில் கடுமையாகவும், மூன்றாவது கணநேரத்தில் குறும்புத்தனமுடையவராகவும் இருப்பார். மாறும் ஒவ்வொரு மனநிலையிலும், அவருடைய முகப்பொலிவுகள் மாறுவதுடன் அமைவதில்லை; அவருடைய முழு நாடி நரம்புகளிலும் இம்மாற்றத்தைக் காணலாம். ஒவ்வொரு சொல்லேயும் எடை பார்த்து, ஒவ்வொரு சொற்றொடரையும் மெருகிட்டு, ஓர் உயர்ந்த தொனியை உண்டாக்கும் சாதாரணக் கவிஞரை ஒத்தவர் அல்லர் வேமனர். அங்ஙணமே அவர் பெரும்பான்மையான தத்துவ அறிஞரினும் வருவதுரைக்கும் ஞானியரினும் முற்றிலும் வேறுபட்டவர். உயர்ந்த பீடத்தையோ அல்லது தந்தத்திலான கோபுரத்தையோ அவர் பயன்படுத்துவதில்லை. தன்னுடைய செய்தியை மக்களுக்கு உரைப்பதற்காகச் சந்தை கூடும் இடத்தில் நின்று பேசுவார்; கவடின்றி வெளிப்படையாகவே பேசுவார்; தேவைப் பட்டால் ஒளிவுமறைவின்றிப் பட்டவர்த்தனமாகவே பகர்வார். அவர்மீது கற்கள் வீசப்பெறினும், நாய்கள் ஏவப்பெறினும் அவர் அவற்றைச் சிறிதும் பொருட்படுத்துவதில்லை. அவர் நாய்களைப் பற்றி அவமதிப்பாகப் பேசும் மேற்கோள்கள் எண்ணற்றவையாக இருப்பதால், உண்மையில் நாய்கள் அவர்மீது ஏவப்பெற்றவையே என்பதாகக் கருதலாம். அவர் சாக்ரீட்டசைப் பற்றியோ அல்லது கிறித்துவைப்பற்றியோ கேள்விப்படாதிருக்கலாம்; ஆனால் வருவதுரைக்கும் ஞானியொருவர் அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய மக்களாலேயே மதிக்கப்பெறுவது அரிது என்பதை உறுதியாகவே அறிந்திருந்தார். தம்முடைய பாடல்கள் ஒன்றில், தம் வீட்டின் கொல்லைப்புறத்திலுள்ள மூலிகை மதிப்பு பெறாததைப் போலவே வருவதுரைக்கும் ஞானியும் அவர் காலத்து மக்களாலேயே மதிக்கப்பெறுவதில்லை என்று கூறுகின்றார்.

பல்வேறு வழிகளில் கவிஞராகவும், தத்துவ அறிஞராகவும், வருவதுரைக்கும் ஞானியாகவும் திகழ்ந்த வேமனர் எல்லாக் காலங்களுக்கும் எல்லா நாடுகட்கும் தேவையான செய்தியைக் கொண்டவராகத் திகழ்கின்றார், ஒழுக்க நெருக்கடியும், வேர்விடா நிலையும், நேரியபோக்கின் இழப்பையும் கொண்ட இன்றைய உலகினுக்கு அவருடைய பொருத்த நிலை மிக அதிகமாகவே அமைகின்றது. மனிதர்கள் மட்டிலும் மனிதர்களாக வாழ்ந்தால் இந்த மண்ணுலகமே விண்ணுலகமாகத் திகழும் என்று அவர் உரைக்க வில்லையா? மேலும், கட்டுக்கதைகளில் வரும் விண்ணுலகின் மீது

6

85

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/92&oldid=1254678" இலிருந்து மீள்விக்கப்பட்டது