பக்கம்:வேமனர்.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18. மேவும் இரும்பொன் றுடைந்திடில் கொல்லனால்
மீளவும் சரிசெய்வ தெளிதுகாண்; நம்முளோர்
ஆவிதான் முறிவொற் ருெடிந்திடின் பண்டுபோல்
ஆக்குதல் மாற்றுதல் அரிதுகாண்! அரிதுகாண்!

வேறு

19. பழைய பானை உடைந்திடின் மீளநாம்
பார்த்து வேறு புதியதை வாங்குவோம்;
பழைய மேனி சிதைந்திடின் இவ்வுயிர்
பண்பின் வேருெரு *மேனியைத் தாங்குமால்
      [*மேனி-உடல்]

20. பற்பன் னூல்களைப் பாங்குறக் கற்பினும்
பற்பல் லாண்டு புவியினில் வாழினும்
பற்பல் லின்பினத் துய்ப்பினும் மீளஅப்
பாழ்த்த மண்ணில் மறைவது மெய்ம்மையே.

21. உலக வாழ்க்கை முடிவுறும் போதினில்
உற்ற சுற்றம் உதவிட வல்லதோ?
நிலைநிறுத்திட யாருளர்? சாவினில்
நீணி லத்தில் உதவுவோ ரில்லையே.

நல்ல மனைவியர்:

22. தெருளும் அன்பினள் மேவிடும் நன்மனை
செல்வி மிக்கதோர் தூய்மையில் ஒங்குமால்;
இருளில் மேவிடும் தீபமே யன்னவள்;
இறைவன் மேவிடும் இல்லமே யவ்விலம்.

23. வருந்தி வந்த விருந்தினர் தம்மிடம்
மருவும் அன்பினர் கற்பகம் போலவே
பரந்து சாலத் தளிர்த்துக் கனியுடன்
பாரில் ஓங்குவர்; சீரிற் பிறங்குவார்.

வேறு

24. ஈட்டுகின்ற பெருஞ்செல்வம் செல்வம் அல்ல;
இணையற்ற நன்மகவே செல்வம்; தோன்றி
வாட்டுகின்ற முதுமைவரை நேர்மை யாக
வாழ்வதுவே செல்வத்துள் சிறந்த செல்வம்.

25. நாயகன் றன் பேரன்பை ஒருத்தி பெற்றால்
நலமுற்ற அவ்வாழ்வில் இன்பம் பொங்கும்;
சேயிழையின் உள்ளத்தில் கோணல் மேவில்
தீண்டாமல் அன்னவளை ஒதுக்கல் நன்றே.

90

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/97&oldid=1256130" இலிருந்து மீள்விக்கப்பட்டது