பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VIII

இருந்தும் மாறுபட்டு, எழுதுவதாகவே நினைக்கிறேன் நமது மக்களின் ஆசைகளையும், நிராசைகளையும், யதார்த்தக் கண்ணோட்டத்தோடு படைக்கிறேன்.

எனது அரசு அனுபவம் வேரில் பழுத்த பலா என்ற குறுநாவலாகவும், நான், சென்னை நகரில் கண்ட கட்டிடத் தொழிலாளர்களின் துன்பங்கள், துயரங்கள், ஒருநாள் போதுமா என்று குறுநாவலாகவும், இந்தப் படைப்பில் உள்ளடங்கி உள்ளன. எனக்குத் தெரிந்தமட்டில், "சாகித்திய அக்காதெமி'ப் பரிசு பெற்ற நாவல்களில், இது ஒன்றுதான், எந்த இடத்திலும் யதார்த்தக் குறைவு இல்லாமல் வந்துள்ள படைப்பு என்று எண்ணுகிறேன். இதனாலேயே திருஷ்டி பரிகாரம் போல, பாராட்டுகளுக்கு மத்தியில், சில 'இலக்கிய" வெத்துவேட்டுச் சத்தங்களும் ஒலித்தன. என்றாலும் ஒரு படைப்பில் ஒருத்தியைக் கொண்டு வந்து, அவள் கற்பு எப்போது வேண்டுமானாலும் பறிக்கப்படலாம் என்று ஒரு சஸ்பென்சை ஏற்படுத்தி, அந்த சஸ்பென்சின் இடையே, ஒரு பிரச்சினையைச் சொல்லிக் கொண்டே போவது எனது வேலை அல்ல. இதனால் எந்த மக்களைப் பற்றிச் சித்தரிக்கிறோமோ, அவர்கள் பக்கம் கவனம் போகாது. ஆகையால்தான் எனது படைப்புக்கள் எதிலும், செக்ஸ் உப்பை கரைப்பதில்லை. இந்த ஒரு தனித்துவமும், இந்த சமூகத்தை மனதார நேசிக்கும் நேயமும், என் படைப்புகளுக்கு ஒரு அங்கீகாரத்தைக் கொடுக்கிறது என்று நம்புகிறேன்.

அலுவலகங்களில் அவமானப்பட்டு, ஆயாசப்பட்டு, திறமையை முளையிலேயே கிள்ளி எறிய விட்டுவிட்டு, தவிக்கும் அன்னம் போன்ற படித்த ஏழைப் பெண்களைப் பற்றி எழுதப்பட்ட நாவல் இது. அரசு அலுவலகங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கும், முற்படுத்தப்பட்டோருக்கும் இடையே இலை மறைவு காய் மறைவாக நடக்கும் போராட்டத்தைச் சித்தரிக்கும் படைப்பு இது. இந்த நாவல் ஒரு சில கல்லூரிகளில் பாட நூலாக வைக்கப்பட்டிருப்பதாக அறிகிறேன். எனது பல படைப்புகள் பல்கலைக் கழகங்களில் பாட நூல்களாக இருந்தாலும், இந்த படைப்பு பாட நூலாக இருப்பதில் அதிக மகிழ்ச்சி ஏற்படுகிறது. காரணம், நாளை, அரசு ஊழியர்களாகவும் அதிகாரிகளாகவும் விளங்கப் போகிற மாணவ சமுதாயம், அரசு அலுவலகங்களிலுள்ள நல்லது கெட்டதுகளை சிந்தித்து, சீர்தூக்கி, இந்தச் சமுதாயத்திற்கு நலன் விளைவிக்கும் வகையில், தங்களைத் தாங்களே இப்போதே தயார்படுத்திக் கொள்ள, இந்த நாவல் உதவும்.

'வேரில் பழுத்த பலா'வை மாத நாவலாக வெளியிட்டு “கனமான நாவல்களுக்காக காலம் அவரை கெளரவப்படுத்தும்" என்று தீர்க்க தரிசனமாக எழுதிய என் இனிய நண்பரும், வார்த்தைச் சித்தருமான வலம்புரி ஜான் அவர்களுக்கு என் நன்றி