பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 91

சித்தாள் பெண் ஒருத்தியைப் பார்த்து தாயம்மா அப்படிக் கூறியதும், அதுவரை வட்டம் போலிருந்த மோவாயில் எல்லைக் கம்பிகள் போல் தாடி படர, கழுத்தைச் சற்று நீட்டி கண்களை சிறிது துருத்தி உதட்டில் பற்கள் பட ஏதோ ஒரு போருக்கு ஆயத்தமானவர் போல், தொலை நோக்காய் பார்த்துக் கொண்டிருந்த நாற்பது வயது மதிக்கத்தக்க பெயிண்டர் பெருமாள் கைகால்களை வெட்டி உதறிப் போடுகிறவர் போல் உதறிக் கொண்டு எழுந்து பேசினார்.

"அண்ணாநகர் ஹவுஸிங் போர்ட் கட்டுற இடத்துல ஒரு சித்தாள் பொண்ண கான்டிராக்டர் ஜாடைமாடையாய் கிண்டல் பண்ணியிருக்கான். அந்தப் பொண்ணு கண்டிச்சிருக்காள். ஒருநாள் ஸ்டோர் ரூம்ல அந்தப் பொண்ணு சிமெண்ட் மூட்டையைத் தூக்கச்சே, கான்டிராக்டர் அவள் கையைப் பிடிச்சு இஸ்துக்கிறான். அவள் கூப்பாடு போட வாட்ச்மேன் அங்கே போய் கான்டிராக்டரை கண்டிச்சிருக்கான். ஒரு வாரத்துல அந்த வாட்ச்மேனை. எதையோ திருடிட்டான்னு சொல்லி, காண்டிராக்டர் போலீஸ் லாக்காப்புல போட்டு, கடைசில அவனை ஒரு வருஷம் ஜெயிலுல போட வச்சுட்டானாம். அந்தப் பொண்ணு தூக்குப் போட்டுச் செத்துட்டாளாம். இந்தச் சங்கதி நம்ம வாயில வர்ல. பூரீதேவியோ, கிரிதேவியோன்னு பேசறோம்."

பேசிய வாய்கள் அடைத்துப் போயின. மேஸ்திரிகளின் வருகையைப் பார்த்த கண்கள் பிரமித்து நின்றன. சில சித்தாள் பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட அல்லது ஏற்படவிருந்த அபாயங்களை நினைத்துப் பார்த்து நெஞ்சச் சுமையில் பெருமூச்சு விட்டார்கள். பெயிண்டர் பெருமாள் கேள்விப்பட்ட சம்பவத்தை நினைத்துப் பார்க்க முடியாதவர் போல் அங்குமிங்குமாக நடைபோட்டார். அங்கிருந்த எல்லாமே அஸ்தமித்தது போல் ஆகாயத்தையே அண்ணாந்து பார்த்த தாயம்மா வெறுமையோடு பேசினாள்.

"பொண்ணா பிறக்கறது தப்பு. அப்படியே பொறந்தா காட்டியும் சித்தாள் பொம்மனாட்டியா பிறக்கறது ரொம்ப தப்பு பாவம். யாரு பெத்த பொண்ணோ? அவளுக்காக சப்போர்ட் பண்ணுன மவராசன். இப்போ ஜெயிலில் எப்படி வாடுறானோ?"

பெருமாள் உலவிக் கொண்டே பேசினார்:

"நம்மள மாதுரி சாதாரண ஜனங்களோட நிசமான கவனத்த திருப்புற விதத்தில் நாட்டில் பத்திரிகைகளும், பாட்டும் நடக்குது. நடிகை ஷோபா செத்துட்டாள்னு நாம் பேசுகிறோம். நம்ம பொண்ணுங்க செத்தால். பிணம் போன பொறவுதான், துக்கம் விசாரிக்கப் போறோம். போன வாரம் இப்படித்தான் அந்தக் கிழவி ரோஸம்மாவ..."