பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 93

வீடு மாதிரி நிக்கோமோ? பிறகு, ஏன். காண்டிராக்டர் பொம்மனாட்டி கையைப் பிடிக்க மாட்டான்? வாட்ச்மேன் ஏன் ஜெயிலுக்குப் போகமாட்டான்?"

தாயம்மாக் கிழவி பேசி முடித்துவிட்டு, பெருமாள் தன்னைப் பாராட்ட வேண்டும் என்பது போல் அவரைப் பார்த்தாள். அவரும் ஒரு பார்வையாலேயே அவளைப் பாராட்டியிருப்பார். அல்லது மற்றவர்களைப் பார்க்கிற தோரணையின் மூலம் அவளின் உத்வேகத்தை அங்கீகரித்திருப்பார். அதற்குள் அந்த இரண்டு உருவங்களும் வந்து விட்டன. அங்கே கூடியிருக்கும் கூட்டத்தைப் பார்த்ததும் மனம் போன போக்கில் நடந்தவர்கள், மனம் நின்றது போல நின்றார்கள். பிறகு மீண்டும் நடக்கப் போனார்கள். ஏனோ நடக்கவில்லை.

அந்த உருவங்களில் ஒன்று ஆண். முப்பது வயது என்று சொல்வதே அதிகம். கான்க்ரீட் கலவை மாதிரி உடம்பின் அணுக்கள் ரத்தத்துடன் பிசையப்பட்டு, அழுத்தமாக இறுக்கப்பட்டது போன்ற உடம்பு. அவன சற்று ஒல்லியாகத் தெரிந்தாலும் போன் வெயிட் ஆசாமி. கூர்மையாக முற்றுப் பெற்ற மூக்கு கறுப்பாக இருந்தாலும் பளபளப்பான கறுப்பு. கடைந்தெடுத்த தேக்குத் தூண்கள் போன்ற கால்கள். இன்னொன்று பெண். அவளுக்கு இருபத்திரண்டு வயது இருக்கலாம். தலையே ஒரு பாரமாகி, அதைத் தாங்க முடியாதவள் போல துவண்ட உடம்பு அளவான எலும்பமைப்பு உள்ளதால், அந்தக் குழைவே ஒரு நளினமாகத் தெரிந்தது. சுட்ட செங்கல் நிறம். அழுத்தமான புருவங்கள். ஆனாலும், எடுத்தெறிந்து பார்ப்பது போலான பார்வை. கர்வமான பார்வையல்ல. கர்வபங்கப் பார்வையும் அல்ல.

இருவரும், தயங்கியபடி நின்றார்கள். எல்லோரும் அவர்களைப் பார்த்துக் கண்களை விரிவாக்கினார்களே தவிர, வாயைத் திறக்கவில்லை. இறுதியில் அவனே பேசினான். பேசிவிட்டு, அவர்கள் தன்னை கிண்டல் செய்யப் போகிறார்களோ என்பது மாதிரி தன்னையும் கூட்டத்தையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டான்.

"இங்க. ஏதாவது விசேஷமா?" கொத்தனார் கொண்டையா, எகத்தாளமாகச் சொன்னார். "நாங்கதான் விசேஷம்." "இல்ல. கூட்டமா நிக்கியளேன்னு கேட்டேன்." "ஏன் நிற்கப்படாதா?”

"நான் என்ன மவராசாவா? இல்ல மந்திரியா? உத்திரவு போட. நானே பஞ்சம் பிழைக்க வந்த பன்னாடை."