பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 95

போகிறவன் போல் உட்காரப் போனான். உடனே அவன் மனைவி அவன் விலாவில் இடித்து மின்வெட்டுப் போல உதட்டைச் சுருக்கி, கண்களை மேல்வாக்கில் தூக்கிப் போட்டாள். அவன் பெட்டிப் பாம்பானான்.

அவனிடம், மேற்கொண்டு யாரும் எதையும் கேட்கவில்லை. அவன் மனைவியையே அகன்ற வாயோடு பார்த்த தாயம்மா ஒன் அயவுக்கு சினிமாவுல நடிச்சா லட்சம் லட்சமாகச் சம்பாதிக்கலாம். சினிமாக்காரன் பார்த்தாமுன்னா விடமாட்டான்' என்று சொல்லப் போனவள், பெயிண்டர் பெருமாளைப் பார்த்ததும் வாயை மூடிக் கொண்டாள். பிறகு அவளுடைய பெயரைக் கேட்டாள்.

"வச்ச பேரு அன்னவடிவு. சிலரு அன்னமுன்னு கூப்பிடுவாங்க. சிலரு வடிவுன்னு கூப்பிடுவாங்க."

"ஒன் ஆம்படையான் எப்படிக் கூப்பிடுவான்? அட வெட்கத்தைப் பாரு ஒன் ஆம்படையான் பேரு என்னம்மா? கொத்தனாரே! இந்தப் பொண்ணு வெட்கப் படறதைப் பாரு திருநெல்வேலி பொம்மனாட்டிங்க கட்டின ஆம்படையான. 'நாயே பேய' என்று கூப்பிட்டாலும் கூப்பிடுவாங்க. ஆனால் பேர் சொல்லி மட்டும் கூப்பிடாதுங்க எனக்குத் தெரியும். அதனால்தான் கேட்டேன். ஏம்மே! ஒன் ஆம்படையான் பேரை சும்மா சொல்லு நீ இப்போ இருக்கிறது மெட்ராஸ். சும்மா சொல்லும்மா."

முன்பு வாயுப் பிடியில் அல்லாடிய அதே பையன், இப்போது சிரிப்புப் பாதியும், கோபம் மீதியுமாய் கேட்டான்.

"ஆயா, நீ என்ன கவர்மெண்ட் மஸ்டர்ரோல எழுதிப் படிக்கது மாதிரி பேர் கேக்குற, பாவம், நாட்டுப்புறங்களைப் போய் டபாய்க்கிறயே."

"என்னோட சர்வீஸ்க்கு. நானு மஸ்டர் ரோல் கூட எழுதலாண்டா?"

"நீ எழுதுனால், அது கார்ப்பரேஷன் மஸ்டர் ரோல் மாதிரி பூடும்?"

"இப்ப மட்டும் என்னவாம்?"

திடீரென்று பேச்சு நின்றது. எல்லாரும் பார்க்காத சமயத்தில் ஒருவர் அங்கே வந்து நின்று பார்த்தார். இரண்டாக மடித்துக் கட்டிய லுங்கி, கையில் கடிகாரம். இன்னொரு கையில் துக்குப்பை, கவிழ்த்துப் போட்ட மீசை, தெனாவட்டான பார்வை. மேஸ்திரி. அந்த அடிமைகளின் உழைப்பை விலை பேச வந்திருக்கும் தரகர். அவர்களுக்கு அவர்தான் மந்திரி, போலீஸ்காரர். இவர்களுக்கு அடுத்தபடியாக வரும் ஆண்டவன். எல்லோரும் எழுந்து, அவரை மொய்த்துக் கொண்டார்கள். அவர், அவர்களை மேலும் கீழுமாகப் பார்த்தார்.