பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

IX

பிற்சேர்க்கை (டிச 2003)

நான் எழுதிய முன்னுரையை நானே ஒரு வாசகன் போல் படித்தபோது நல்லதும் கெட்டதுமான நினைவுகள் மேலோங்கிப் பொங்குகின்றன.

நாளையும், கிழமையையும் துல்லியமாகக் குறிப்பிட முடியாவிட்டாலும், இன்னும் எனக்கு நன்றாகவே நினைவு இருக்கிறது. 1992 ஆம் ஆண்டு... டிசம்பர் மாதம் 15-ஆம் தேதிக்குள் இருந்து இருபதுக்குள் இருக்கும்.

அந்தக் காலத்தில், சென்னை வானொலி நிலையத்தின் செய்தி ஆசிரியராகப் பணியாற்றிய நான், சைதாப்பேட்டையில் மாலையில் நடைபெற்ற நரிக்குறவர்கள் சந்திப்பில் பங்கேற்றுவிட்டு, அவசர அவசரமாக வானொலி நிலையத்திற்குத் திரும்பினேன். அப்போது, எனது அலுவலக சகாக்கள் கங்ராஜுலேஷன் சார் என்றார்கள். அந்தச் சமயத்தில் எனக்கு பதவி உயர்வு வரப்போவதாக ஒரு பேச்சு அடிபட்டது. உடனே அவர்களிடம் எந்த இடத்துலப்பா என்னப் போட்டுருக்காங்க என்று கேட்டேன். உடனே சகாக்கள், எனக்கு வேரில் பழுத்த பலா என்ற நாவலுக்காக சாகித்திய அக்காதெமி பரிசு கிடைத்து இருப்பதாகக் கூறி, செய்தி நிறுவனங்களான யு.என்.ஐ., பி.டி.ஐ., 'கட்டுகளை'க் காண்பித்தார்கள்.

விருதுக்கு முன்னே

இந்த விருது பற்றிய அறிவிப்பு வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, எனது இனிய நண்பரும், சிறந்த எழுத்தாளரும், சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தின் முன்னாள் இயக்குநருமான ஏ. நடராசன் அவர்கள், எனக்கு இந்த விருது கிடைக்கலாம் என்றார். உடனே நான் 'நம்பள மாதிரி ஆட்களுக்கு எல்லாம் கொடுக்கமாட்டாங்க அண்ணாச்சி' என்றேன். சில நாட்களுக்குப் பிறகு எழுத்தாளர் மாலன் அவர்கள், "சாகித்திய அக்காதெமி"யின் பரிசுப் பட்டியல் நாவல்களில் ஒன்றாக வேரில் பழுத்த பலா தன்னுடைய பரிந்துரைக்கு வந்திருப்பதாகத் தெரிவித்தார். அப்போதும், அவர் சொன்னதை கேட்டுக் கொண்டேனே தவிர, நீங்கதான் பார்த்துச் செய்யனும் என்று ஒரு வார்த்தைகூட கேட்டதில்லை.

விருதுக்குப் பின்னே...

இப்படிப்பட்ட சூழலில், நானோ, எனது நாவலோ பரிசுக்குரியதல்ல என்று சில சிற்றிதழ்கள் எழுதியதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. காரணம் என்னைப் பற்றியும் என் எழுத்தைப்