பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 ஒருநாள் போதுமா?

கேட்காமலே இங்கு வந்ததை பார்த்தியாளா என்று சொல்லிக் கண்டிக்கப்போனாள்.

பிறகு கஷ்டப்படும்போது குத்திக் காட்டுவது கொலையைவிடக் கொடுமையானது என்று உணர்ந்தவள் போல் உணர்வின்றி உட்கார்ந்திருந்தாள். அவனும் மோவாய் நிமிர, முன்தலை சாய, ஆகாயத்தில் இருந்து தேவதூதன் வருவது வரையிலும் காத்திருக்கக் கங்கணம் கட்டியவன் போல், கால நேர கன பரிமாண்ங்கள் மறந்துபோய் மரத்திருந்தான். அன்னவடிவு திடீரென்று அவன் முழங்காலை ஆட்டி, மகிழ்ச்சியோடு கத்திக் கொண்டே எழுந்தாள்.

"அந்தா. மூலவீட்டு. மாமாவும். அத்தையும் வாராவ. கும்புடப் போன சாமி குறுக்க வந்தது மாதிரி" என்றாள்.

அவனும் எழுந்தான். ஜரிகை வேஷ்டியுடன், பட்டுப்புடவையுடன், மோதிரக் கையோடு, வைரமூக்குத்தி மூக்கோடு, மைனர் செயின் கழுத்தோடு, அரைக்கிலோ நெக்லஸ் கொத்துச் செயின் வகையறாக்களோடு திருமுருகன் கோவிலுக்கு தேங்காய் பழத்தோடு போய்விட்டு, விபூதி பிரசாதம் குங்குமம் மறைத்த நெற்றிகளோடு, அர்த்தநாரீஸ்வர உருவம்போல் உடலோடு உடல் ஒட்ட, காலோடு கால் தட்ட திரும்பிக் கொண்டிருந்த துரைப்பாண்டியும், அவரது பத்தினி வெள்ளையம்மாளும் அவர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, அந்த ஆச்சரியத்தால் அதிர்ச்சியுற்றார்கள். துரைப்பாண்டி அனிச்சையாகக் கத்தினார்.

"என்னடா. வேலு. திடுதிப்புன்னு இந்தப் பக்கம்."

"இப்பதான் சின்னையா. முருகனை வேண்டிக்கிட்டேன். எங்க ஊரு ஆளு யாரையாவது கண்ணுல காட்டுன்னு மனசுல குப்பிட்டேன். அவன் ஒம்மக் காட்டிட்டான்."

"என்னடா இது. திடுதிப்பின்னு? இது ஒன் சம்சாரமா?" அன்னவடிவு, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். "என்ன மாமா, அப்படி கேட்டுப்புட்டிய? நான் முப்புடாதி பாட்டியோட பேத்தி. இவரு உம் அய்யாவுக்கு பெரியய்யா மவனாச்சே அத்தையும் நீரும் வயலுக்கு வந்தப்போ, இவிய தேங்காய் பறிச்சாவே. நான் தேங்காய் சீவிக் கொடுத்தேனே. அந்த ஞாபகம் இருக்கா?

"அத்தை சிறிது தூரம் நடந்து போய் ஒதுங்கி நின்று கொண்டாள். மாமா பிடிகொடுக்காமல் பேசினார்.

"என்னப்பா. இப்டி சொல்லாமக் கொள்ளாம.."