பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 101

"என்ன சின்னய்யா செய்யறது? ஊர்ல. மழை தண்ணி இல்ல. விவசாயம் நடக்கல. நாங்க நடக்க வேண்டியதாப் போச்சு..."

"இந்தா பாரும். மாமா கிட்டயும், அத்தை கிட்டயும் மறைக்காமச் சொல்லும் ஒரு பெரிய மனுஷன்கிட்ட சொல்லித்தான் ஆகணும்."

"அதுவும் சரிதான். ஒம்ம கிட்ட எதுக்காக சின்னையா மறைக்கணும்? நாங்க... ஊர விட்டு வந்ததுக்கு. பஞ்சம் மட்டும் காரணமல்ல. தெக்குத்தெரு நாராயணன் மகன். அடைக்கலம் தெருயுமுல்லா? அந்தப் பயமவன். இவளப் பார்த்து ஏடாகோடமாய் பேசியிருக்கான். ஒரு தடவ. கைய வேற பிடிச்சி இழுத்திருக்கான். என்னால தாங்க முடியல. கோபத்துல ரெண்டு தட்டுத் தட்டுனேன். காயமுமில்ல. ரத்தமுமில்ல. அவங்க பங்காளிவ திரண்டு வந்துட்டாங்க. இந்த எளியவனால தாக்குப்பிடிக்க முடியுமா? நம்ம பங்காளிகல்ல பெரியவரு நீரு. ஒம்ம மாதுரி எல்லோரும் மெட்ராஸ் வந்தாச்சு. நான் ஒத்தயா என்ன பண்ண முடியும்? கொலை விழுற அளவுக்கு வந்துட்டு. அதப்பத்திக் கூட கவலப்படல. இவள ராவோட ராவாய் தூக்கிக்கிட்டு போறதுக்குக்கூட திட்டம் போட்டுட்டாவ. போலீஸ்காரன் கிட்ட சொன்னால், ஒன் பொண்டாட்டிய ஸ்டேஷனுக்கு வரச் சொல்லுங்கறான். ஒண்னும் ஒடல. ஓடி வந்துட்டோம்."

"இனுமே என்ன செய்யுறதாய் உத்தேசம்?" இதற்குள் விலகி நின்ற அத்தை "நீங்க வாரீங்களா. நான் போகட்டுமா?" என்று சொல்லிக்கொண்டே போய் விட்டாள். துரைப் பாண்டி சொன்னதையே சொன்னார்,

"இப்போ என்ன செய்யுறதாய் உத்தேசம்’

"அதுதான் புரியலே சின்னய்யா. ஒரு இருபத்தஞ்சு ரூபா கொடுத்தால் காய்கறி வியாபாரம் செஞ்சி பிழைச்சுக்குவேன்."

"நான் இன்னிக்கு சீட்டுப்பணம் கட்டணும். அதுக்கே இல்ல."

"இல்லன்னா உங்க மில்லுலயாவது, மளிகைக் கடையிலாவது, அரிசி மண்டியிலாவது, மரத்தொட்டியிலாவது எந்த வேலையாவது கொடுங்க, அநாதை மாதிரி நிக்கோம்."

"அது வாரதுக்கு முன்னால தெரியணும்பா. ஒன்ன மாதிரி ஆளுங்களுக்கு இடம் பொருள் ஏவல் தெரியாண்டாமா? அந்தப் பய கையைப் புடிச்சா முன்னால், பெரிய மனுஷங்கிட்டே சொல்லாம. அடிச்சால்? அவனுவ வளையலாப் போட்டிருப்பான்? காலம் கலி காலம்பா. அதுக்கு ஏத்தாப் போலே நடக்கணும். சரி நான் வரட்டுமா?"