பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 ஒருநாள் போதுமா?

ஒரு பாதத்தை இன்னொரு பாதம் தேய்க்க, நிலை கொள்ளாமல் நின்று கொண்டிருந்த அன்னவடிவு. அருகே நின்ற மின் விளக்குக் கம்பத்தில் முதுகைச் சாய்த்து உட்கார்ந்தபடியே 'மாமாவை போகவிடுங்கள் அவரும் இவ்வளவு நேரம் நம்மகிட்ட பேசுனதே பெரிசு" என்றாள். வேலு, அவளை கோபமாகவோ தாபமாகவோ பார்த்தபோது, துரைப்பாண்டி அந்த வட்டாரத்தில், அவர் டி. பாண்டி) நழுவி விட்டார். வேலு மனைவியின் அருகே உட்கார்ந்தான்.

இருவரும், ஒருவருடன் ஒருவர் பேசவில்லை. போனவரையும் பார்க்கவில்லை. பொழுது கழிவதும் தெரியவில்லை. வேலு தலையைச் சாய்த்து கரங்களை அதற்கு அணை கொடுத்தபடி வெறித்து நோக்கினான். அவளோ, சற்று நேரத்திற்கு முன்புவரை ஊர்க்காரர்கள் கண்ணில் படுகிறார்களா என்று ஆர்வத்தோடு பார்த்தவள். இப்போது அவர்களின் கண்களில் விழக்கூடாது என்று நினைத்து, முகத்தைக் கவிழ்த்தபடி, முதுகை நிமிர்த்தினான். பசி மயக்கத்தை மானமயக்கம் விழுங்கிவிட்டது. திக்குத் தெரியாத இடத்தில், திசை தெரியாமல் தங்களுக்குத் தாங்களே தனிமைப்பட்ட அந்த இளம் ஜோடி ஒருவர் இருப்பது இன்னொருவருக்குத் தெரியாதது போல், உட்கார்ந்திருந்தார்கள். நெடியதோர் நேரத்திற்குப் பிறகு, வேலு தன் பாட்டுக்குப் புலம்பினான். "இந்த மனுஷனோட அக்காவ இதே மாதிரி ஒருவன் கிண்டல் பண்ணியிருக்கான். உடனே எங்கய்யா அவனை அவன் வீட்ல போயி தூக்கிக்கிட்டு முச்சந்தில கிடத்தி மிதிச்சாராம். அது அந்தக் காலம். இவரு ஒன் கைய அந்தப் பய பிடிச்சத பெரிசா நினைக்கல பாரு."

"செத்த பேச்சை ஏன் பேசறியே? ஒருவன் நம்மள உதாசீனம் செய்யறான்னா, நாமும் அவனை உதாசீனம் பண்ணனும். இவரு என்ன நமக்குப் படியளக்கிற பரமசிவமா?"

"ஒன்னக் கூட்டிவந்து திக்குத் தெரியாத காட்ல." "சும்மா பினாத்தாதேயும். ஊர்ல இருந்ததைவிட இப்போ சந்தோஷமாத்தான் இருக்கேன். அங்கே தாலிக்கயித்த பிடிச்சுக்கிட்டே தவமிருந்தேன். இங்க எது போன்ாலும் என் தாலிக் கயிறு போகாதுங்கிற தைரியத்துலே எந்தக் கஷ்டமும் பெரிசாத் தெரியலே."

"ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா, கையில் இரண்டு ரூபா மிச்சமிருக்கு."

"இருக்கட்டும். அதோ பாரும். நிறைய சனங்க ரோட்லயே சோறு பொங்குறாங்க. நாமளும் பொங்கலாம். ஒரு கிலோ அரிசி இருக்கு."

"கடவுளே ஒனக்கா இந்தக் கதி?"