பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 105

கஞ்சியை ஊற்றப் போக, அவள், அவன் தட்டைத் தாழ்த்தி, தன் தட்டை உயர்த்தி, தன் கஞ்சியை அவனுக்கு எடுக்கப் போக, தட்டுக்கெட்ட ஊடல்கள் நடக்கும் வீடுகளுக்கு முன்னால் தட்டு ஊடல் நடந்தது. இதர தெரு மக்கள் பேச வந்ததை மறந்து, அவர்களை ரசித்துப் பார்த்தார்கள்.

அன்னவடிவு. தெருவுல அடுப்பு முட்டி, தின்ன வேண்டிய நிலைமை ஆயிட்டே' என்று தன்னையறியாமலே நினைத்தவள், அங்கிருந்த மனிதர்களைப் பார்த்ததும், அவர்களின் ஆதரவான முகங்களைப் பார்த்ததும், கடந்த பத்து நாட்களாக இருந்த பீதி அடியோடு அற்றுப் போனது போல், அவர்களைப் பார்த்துப் புன்னகை செய்தாள். கிருஷ்ணாயில் வாங்கிக் கொண்டு, அந்தப் பக்கமாக வந்த தாயம்மா கொஞ்சம் கஞ்சி குடிக்கியா என்ற குரல் கேட்டு நிமிர்ந்தாள். பிறகு அடி ஆத்தே. கட்சில. இங்கேயே டேரா பூட்டுட்டியா. என்று சொல்லிக் கொண்டே, குத்துக்காலிட்டு உட்கார்ந்தாள். ரோட்டு வாழ்க்கைக்கு பரிச்சயமில்லாத அன்னவடிவை, பரிதாபத்துடன் பார்த்தாள். பிறகு அந்தப் பரிதாபத்தையே பேச்சாக மாற்றினாள்.

"ஒங்க. ஜாதி சனத்துக்கிட்ட போகாம, இப்படியா செய்யறது?" அன்னவடிவு, ஒரு டம்ளரில் கஞ்சியை ஊற்றி, தாயம்மாவிடம் நீட்டிக் கொண்டே "எங்க சாதி சனம் இதோ இங்க இருக்கவங்கதான்." என்றாள். தாயம்மா ஆச்சரியமாகக் கேட்டாள்.

"நானும் எத்தனையோ நாட்டுப்புறப் பொம்மனாட்டிகளைப் பார்த்துக்கினு இருக்கத்தான் செய்றேன். ஆனால் ஒன்னை மாதுரி துணிச்சலாயும், சூதுவாது இல்லாமலும் பேசுற பொம்மனாட்டிய இப்பத்தான் பார்த்திருக்கேண்டிம்மா."

அன்னவடிவு சிரித்தாள். ஒவ்வொரு பல்லும், தனித் தனியாகச் சிரிப்பது போல் கொள்ளைச் சிரிப்போடு, தாயம்மாவைப் பார்த்தாள்.

அவளோ, ஏதோ ஒன்றை யோசிப்பது போல தலையை ஆட்டிவிட்டு, பிறகு வடிவின் கையைப் பிடித்துக் கொண்டே கஞ்சியைக் குடித்து முடித்துவிட்டுப் பேசினாள்.

"நீ அறியாத பொண்ணு. என்னால தெருவுல தாக்குப் பிடிக்க முடியாது. பொறுக்கிப் பயலுவ வருவாங்கோ, பக்குவமாப் பேசணும். கார்ப்பரேஷன் லாரியைப் பார்த்தா நாய் ஒடி ஒளியற மாதிரி, நீயும் சட்டிபானையோட ஒளியணும். போலீஸ்காரன் மிரட்டிப் பார்த்தால் மிரளாமப் பார்க்கணும். இதுல்லாம் ஒன்னால முடியாது. பேசாம என் குட்சையிலே தங்கிக்கோ, அப்புறம் பார்த்துக்கோலாம். அய்ய, தெ ஒன்னைத்தான். எய்ந்திரு."