பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 ஒருநாள் போதுமா?

அன்னவடிவு கிராமத்தில் தனக்கு ஏற்பட்ட அவமானப் பின்னணியில் யோசிப்பவள் போல், கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி சிலையின் தோரணையில் ஆகாய வெளியில் அளவளாவுகிறவள் போல பார்த்தாள்.

தாயம்மாவுக்கு, இப்போது அவள் தன்னோடு வரவேண்டும் என்பது தவிர, உலகில் வேறு எந்த லட்சியமும் இருப்பதாகத் தெரியவில்லை.

"ஏன் யோசிக்கிற? கடிச்சா தின்னுடப் போறேன்? எய்ந்திருமே. இந்தாப்பா ஒன்னத்தான், கோணியக்கட்டு. நாலு நாளிக்கி இருந்துக்கலாம். அப்புறமா ஆனது ஆவட்டம். எனக்காக விட்டுக் கொடுத்த மவராசிப் பொண்ணு, நானு, கண்ணுக்கு முன்னாடியே பாத்துக்கினு இருக்கணுமுன்னு ஒரு ஆச'

அன்னவடிவு, தாயம்மாவைப் பார்த்தாள். பாகவதர் தலைமாதிரி அடர்த்தியாக இருந்தாலும், குட்டையாக இருந்த தலைமுடி, காதுகளை மறைக்க, உள்ளத்தைப்போல பெரிய கண்களோடு, உதடுகள் நேயத்தால் துடிக்க, வருடக்கணக்கான பழக்கத்தை, அதுவும் உறவு கலந்த பழக்கத்தை. ஒரு நொடிப் பழக்கமாக மாற்ற வைத்துவிட்டாள் இந்தம்மா, இதே இந்தத் தெருவில், அரைமணி நேரப் பழக்கத்தை, ஆயுள் பழக்கமாகக் கருதும் அந்த தாயம்மாவின் கழுத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள், அன்னவடிவு. தன்னையறியாமலே, விம்மப் போனாள்.

காலிப்பயல் ஒருவன் கையைப் பிடித்ததைப் பெரிதாக நினைக்காமல், 'இவளால கொலயே விழும் போலுக்கே" என்ன நடந்துதோ, ஏது நடந்ததோ. எவனாவது இசகு|பிசகாப் பாத்திருப்பான். புருஷனுக்குத் தெரிஞ்சிடப் போவுதுன்னு இவள் முந்திக்கிட்டாள். கொலையும் செய்வாள் பத்தினி என்கிறது சும்மாவா? பொம்புள பேச்ச அப்படியே நம்பப்படாது என்று ஊர் பொம்பிளைகளே பேசியதைக் கேட்டு, தன்னுள் மருகி, தனிமைப்பட்டு, தவியாய் தவித்து, நெருப்பாய் கொதித்து. பனியாய் உறைந்து பழக்கப்பட்ட அன்னவடிவால், தாய்மையின் தத்துவத்தை பெயரில் மட்டுமல்லாது பிறவியிலேயே கொண்டவள்போல் துலங்கிய தாயம்மாவை, விடாப்பிடியாகப் பிடிப்பவள் போல் பிடித்துக்கொண்டாள். பிறகு அழுவதை அவமானமாகக் கருதுபவள்போல், திடீரென்று எழுந்து சிறிது தூரம் நடந்து, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, திரும்பி வந்தாள்.

தாயம்மா, தன் கழுத்தில் தெறித்த ஈரத்துளிகளைத் துடைத்துவிட்டு, எதுவும் பேசாமல் பாத்திரங்களை எடுத்து, அருகே இருந்த கோணிக்குள் திணித்தாள். அவளின் அன்பு போல் அந்தக் கோணியும் பெருத்துக் கொண்டிருந்தது.